யுத்தக் காலத்தில் காணாமல் போன இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் தொடர்பில் ஆராய தான் நடவடிக்கை எடுப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவிக்கின்றார்.
பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு தான் உதவிகளை வழங்க தாயாராகவே உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்பான உரிய தகவல்களை தன்னிடம் வழங்கினால், அதற்கான உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக ஜீவன் தொண்டமான் தெரிவிக்கின்றார்.
கேள்வி : கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளை பெற்ற தமிழ் பிரதிநிதி நீங்கள். ஒரு அரசியல் பலம் உங்களிடம் காணப்படவில்லை. அனுதாபத்திற்காகக் கிடைத்த வாக்கு என கூறப்படுகின்றது. நீங்கள் கூறுவது என்ன?
பதில் : “முதல்ல அரசியல் பலம் இல்லனு சொல்லுறது. தேர்தல் பிரசாரமாக இருந்தாலும் சரி. தேர்தல் பிரசாரத்திற்கு பிற்பாடு கிடைத்த வரவேற்பாக இருந்தாலும் சரி அதுலயே தெரிஞ்சிருக்கும் எங்கட அரசியல் பலம் என்னானு. அதேநேரம் அனுதாப வாக்குனு சொல்லுறாங்க. சொல்லுறவங்க சொல்லட்டும். நீங்க பார்த்திருப்பீங்க நுவரெலியா மாவட்டத்தில மட்டும். கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பதிவு செய்யப்பட்டிருக்காங்க வாக்களிக்க. அப்படி இருக்கும் போது காங்கிரஸிற்கு ஏற்கனவே ஒரு பலம் இருந்திருக்கு. அது மட்டும் இல்லாம 3 வருஷமாக மக்களுடன் இருந்து வேல செய்திருக்கின்றோம். அது மட்டுமில்லாமல் இன்னைக்கு வந்திருக்க இளைஞர்களே எங்கள முன்னாடி கொண்டு வந்திருக்காங்க. நீங்களே சிந்தித்து பாருங்க, ஒரு லட்சம் வாக்குகள தாண்டியிருக்கோம். இத அனுதாப வாக்குனு சொல்லுறவங்க பற்றி நான் ஒன்னும் சொல்லயில்ல.”