எடப்பாடி பழனிசாமி Vs ஓ. பன்னீர்செல்வம்: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்?

எடப்பாடி பழனிசாமி Vs ஓ. பன்னீர்செல்வம்: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்?

2021ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு விடைதேடி, சுதந்திர தின கொடியேற்றத்திற்குப் பிறகு, தமிழக அதிமுக அமைச்சர்கள் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இல்லத்திற்கும் மாறி மாறி சென்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

போஸ்டர் யுத்தம்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில், தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓபிஎஸ் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த சுவரொட்டிகள் குறித்து சமூகவலைத்தளங்களில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்த போட்டி தொடங்கிவிட்டதாகக் கருத்துகள் வெளியாகின. அந்த போஸ்டர்கள் குறித்த தகவல்கள் பரவியதும் கிழிக்கப்பட்டன.

சுதந்திர தின கொடியேற்றத்திற்குப் பின்னர், அதிமுக அமைச்சர்கள் முதலில் தலைமைச் செயலகத்தில் முதல்வரிடம் பேசினர். பின்னர், துணை முதல்வர் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது. மீண்டும் அணிவகுத்து, முதல்வர் இல்லத்திற்குச் சென்றனர். பத்திரிகையாளர்களிடம் கருத்து எதுவும் தெரிவிக்காத மூத்த அமைச்சர்கள், விரைவில் தகவல்கள் வெளியாகும் என்றுமட்டும் தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி அல்லது ஓ. பன்னீர்செல்வம்: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்?

அதிமுக அமைச்சர்கள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இல்லத்திலும் ஆலோசனை நடத்துவதன் மூலம், இருவர் மத்தியில் குழப்பம் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர் கே ராதாகிருஷ்ணன்.

எதற்கான ஆலோசனை?

எடப்பாடி பழனிசாமி அல்லது ஓ. பன்னீர்செல்வம்: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்?

”முதல்வர் வேட்பாளர் குறித்த ஆலோசனையாகவோ அல்லது விநாயகர் சதுர்த்தி விழா அனுமதியை முதல்வர் பழனிசாமி மறுத்தது தொடர்பான ஆலோசனையாகவோ இருக்கலாம். ஆனால் இது செயற்கையாக உருவாக்கப்பட்ட பரபரப்பு என்பது தெளிவாகத் தெரிகிறது. அமைச்சர்கள் தங்களது வாய்ப்புக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்பதற்காக இருவரிடம் ஆலோசனை நடத்துகிறார்கள். விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பாஜவுக்கு எதிராக இருக்கும், அதனால் பிற எதிர்ப்புகளைக் கட்சி எதிர்கொள்ளவேண்டிய சூழல் உருவாகும் என்ற எண்ணத்தில் அமைச்சர்கள் இருப்பதாகத் தெரிகிறது. இந்த பரபரப்பு குறைந்தது ஒருவாரம் நீடிக்கும் என எதிர்பார்க்கிறேன்,”என்கிறார் ராதாகிருஷ்ணன்.

ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியது குறித்துப் பேசிய அவர், ”ஓபிஎஸ் குழுவின் அனுமதி இல்லாமல் போஸ்டர் ஒட்டியிருக்க மாட்டார்கள். தற்போது போஸ்டர்கள் நீக்கப்படுவதில் எந்த வியப்பும் இல்லை. ஓபிஎஸ்யின் செல்வாக்கைக் காட்டுவதற்காக, அவர் முதல்வர் வேட்பாளராக வேண்டும் என்பதை உணர்த்த ஒரு பிரிவினர் அந்த போஸ்டர்களை ஒட்டினர். தற்போது அந்த தகவல்கள் வெளியாகிவிட்டதால், அவை நீக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை,”என்கிறார் ராதாகிருஷ்ணன்.

ஆலோசனை நடத்திய குழுவில் மூத்த அமைச்சர்களாக செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல்வர் வேட்பாளர் குறித்து முன்னர் வேறுபட்ட கருத்துக்களைப் பேசிய அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்குபெறவில்லை.

கூட்டாக அறிக்கை

அதிமுக தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட முறையில் கட்சியின் கழக பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் கருத்துகள் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கருத்துக்கள் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சுதந்திர தின விழாவை அடுத்து, பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஒரு குழுவாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் இல்லத்திற்குச் சென்று ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையின் முடிவில், 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தகவல் தெரிவிக்கக்கூடாது எனக் கூட்டறிக்கை வெளியாகியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கருத்து பரிமாற்றங்கள் செய்வதால் எதையும் சாதிக்கப்போவதில்லை என்றும் ஊடக விவாதங்களில் அதிமுக அரசின் சாதனைகள் பற்றி எடுத்துசொல்லவேண்டும் என்றும் கட்சியின் ஒப்புதல் இன்றி பிற தகவல்களை பேசக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

”கட்சியின் அனைத்து முக்கிய கொள்கை முடிவுகளையும், கூட்டணி குறித்த நிலைப்பாடுகளையும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில், ஜனநாயக ரீதியில் கழகத்தின் தலைமை விரிவாக ஆலோசித்து கழகத் தொண்டர்களின் மன உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் சிறப்பான முடிவு மேற்கொள்ளப்படும்,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *