பொலிஸாரின் வழக்கை குப்பைத் தொட்டியில் போடவேண்டும்-சுமந்திரன்

பொலிஸாரின் வழக்கை குப்பைத் தொட்டியில் போடவேண்டும்-சுமந்திரன்

இலங்கையில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பின்பற்றப்படாத அநாகரிகமான முறையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முன்னிலையான நீதித் துறை சார்ந்த சட்டத்தரணிகளுக்கு எதிராக கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் கடும் ஆட்சேபனை வெளியிட்டுள்ளார்.

இதனால், இந்த வழக்கை குப்பைத் தொட்டியில் மன்று போடவேண்டும் அல்லது வழக்குத் தொடுனர் அதனை மீளப்பெற வேண்டும் என கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயத்திக்கத்துக்குள் நாளை நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதிக்கு இடையே இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை என்ற வியாக்கியனத்தின் கீழ் இந்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர்.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் நினைவேந்லை நடத்தவுதற்கு தடை கேட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன், உள்ளிட்ட 37 பேருக்கு எதிராக தடைக் கட்டளை வழங்குமாறும் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.

அதில், நான்காவது, பிரதிவாதியான தன் சார்பில் முன்னிலையாகி முன்வைத்த ஆட்சேபனையின் போதே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு மன்றுரைத்தார்.

இதன்போது, “பொலிஸார் இந்த மனுவில் என்னையும் ஏனைய சட்டத்தரணிகளையும் குற்றச்செயலில் ஈடுபடவுள்ளனர் என்று குறிப்பிட்டு பிரதிவாதிகளாக இணைத்துள்ளனர்.

பொலிஸார் குறிப்பிட்டுள்ள நீதித்துறை சார்ந்த பலர் இன்றைய தினம் மேல் நீதிமன்றில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முன்னிலையாகியவர்கள்.

பொலிஸார் இப்படி நடந்துகொண்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சட்டத்தரணிகள் எவ்வாறு நீதிமன்றில் முன்னிலையாவார்கள்.

நான் மூத்த சட்டத்தரணியாகவும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஜனாதிபதி சட்டத்தரணியாகவும் உள்ளேன். நான் குற்றச்செயலில் ஈடுபடுவேன் என்று பொலிஸாரால் இந்த மன்றுக்கு எவ்வாறு விண்ணப்பம் செய்ய முடியும்?

யாராவது ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் சாட்சிக் கூண்டில் ஏறி நான் குற்றம் செய்யப்போகின்றேன், சமாதானத்துடன் வாழும் மக்களிடம் குழப்பத்தை தூண்டிவிடப் போகின்றேன் என்று சாட்சியமளிக்க முடியுமா?

அந்தத் திராணி யாருக்காவது இருக்கின்றதா? பொலிஸ் சீருடைய அணிந்து வந்து எங்களை முட்டாள்கள் ஆக்காதீர்கள்.

எனவே, இலங்கையில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பின்பற்றப்படாத அநாகரிகமான முறையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முன்னிலையான நீதித் துறை சார்ந்த சட்டத்தரணிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை பொலிஸார் மீளப்பெறவேண்டும் அல்லது மன்று குப்பைத் தொட்டிக்குள் போடவேண்டும்.

நாம் கொவிட்-19 நோய் பரவலுக்கு ஏதுவாக சட்ட திட்டங்களை மீறப்போகின்றோம் என்று பொலிஸார் விண்ணப்பம் செய்கின்றனர்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் அண்மையில் அமைச்சர்கள் வருகை தந்து ஒரு மண்டபத்துக்குள் 250 பேருக்கு மேல் அமர்ந்திருந்து கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்தக் கூட்டங்கள் பொலிஸாரின் கண்களுக்குத் தெரியவில்லையா?

அந்தக் கூட்டங்களுக்கு நானும் சென்றிருந்தேன். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிவிட்டேன் என்று என்னை இன்று வரை பொலிஸார் கைது செய்யவில்லை” என சுமந்திரன் மன்றுரைத்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *