இலங்கை உட்பட உலகெங்கும் பலவந்தமாக ஆட்கள் காணாமல் ஆக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்து அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் பிராட் ஷெர்மன் மற்றும் ஜேமி ரஸ்கின் ஆகியோர் சபையில் தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளனர்.
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பில் நீதி கோரியும் பொறுப்புக் கூறலை வலியுறுத்தியும் 1,300 நாட்களுக்கு மேலாகப் போராடிவரும் காணாமலாக்கப்பட்டோர் உறவுளின் போராட்டம் குறித்தும் இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டுமென வலியுறுத்தி அரச படைகள் மற்றும் ஏனைய தரப்புக்களின் அச்சுறுத்தல்களையும் துன்புறுத்தல்களையும் மீறி காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் உறுதியுடன் போராடுவதாகவும் தீர்மானத்தை முன்வைத்த ஜேமி ரஸ்கின் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பலவந்தமாக ஆட்களை காணாமல் போகச் செய்தமை உள்ளிட்ட போர்க்குற்றங்கள் சுமந்தப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட இரணுவ அதிகாரிகள் பொறுப்புக் கூறத் தவறிவிட்டனர். இவர்களைப் பொறுப்புக் கூறச் செய்ய வேண்டிய இலங்கை அரசு அதற்கு மாறாக அவர்களை இராணுவ உயர் பதவிகளில் தரமுயர்த்தியுள்ளது எனவும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டுப் பிரகடனத்தை அங்கீகரிக்குமாறு இந்தத் தீர்மானத்தில் அமெரிக்காவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பலவந்தமாக ஆட்களை காணாமல் போகச் செய்தல் போன்ற மனித உரிமை மீறல்களைச் சகித்துக்கொள்ள முடியாது என இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தவர்களில் ஒருவரான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பிராட் ஷெர்மன் கூறினார்.
உலகெங்கும் காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எங்கள் கூட்டாளிகளுடன் இணைந்து நாங்கள் போராட வேண்டும்.
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டும் என குற்றங்களுடன் தொடர்புடையவா்களுக்கு அல்லது அதற்குப் பொறுப்பானவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, ஆசிய பிராந்தியத்தில் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவா்கள் மற்றும் போரில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். அத்துடன் குற்றங்களுடன் தொடர்புடையோர் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன் எனவும் பிராட் ஷெர்மன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல தமிழர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் பலவந்தமாகக் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவில் சுஹார்டோ ஆட்சியின் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சீனாவில் உள்ள யுகூர் முஸ்லிம்கள் அட்டூழியங்களை அனுபவிக்கின்றனர்.
டாக்டர் குல்ன் அப்பாஸ் என்ற உய்குர் முஸ்லீம் மருத்துவ ர்கடந்த 2018 முதல் சீனாவால் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் இருக்கும் இடத்தையும் அவர்களர் நிலையையும் அறியும் உரிமையைக் கொண்டுள்ளனர் எனவும் இந்தத் தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பிராட் ஷெர்மன் மற்றும் ஜேமி ரஸ்கின் ஆகியோர் முன்வைத்துள்ள இந்தத் தீர்மானத்தில் ஆட்களை பலவந்தமாகக் காணாமல் போகச் செய்தல் என்ற சட்டவிரோத நடைமுறையை கைவிடுமாறு அனைத்து நாடுகளிடமும் கோரப்பட்டுள்ளது.
சீனா, இலங்கை, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் இந்தத் தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.