மீண்டுமொரு பயங்கரவாதம் உருவானால் தமிழ் தலைவர்களே பொறுப்புக்கூற வேண்டும் – சரத் வீரசேகர

மீண்டுமொரு பயங்கரவாதம் உருவானால் தமிழ் தலைவர்களே பொறுப்புக்கூற வேண்டும் – சரத் வீரசேகர

தமிழர்களின் உரிமைகள், தமிழர்களின் தேவைகள் குறித்து வாய் திறக்க இங்குள்ள தமிழ் தலைவர்கள் எவருக்கும் உரிமை இல்லை. புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்ள நாடகமாடும் இவர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்க முடியாது என சபையில் ஆவேசமாக தெரிவித்தார் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர. மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் ஒன்று தலைதூக்கினால் தமிழ் மக்கள் மத்தியில் விரோதத்தை ஊக்குவிக்கும் இவர்கள் அனைவருமே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

சட்டத்தை மதிக்கும், சட்டதிற்கு கட்டுப்படும் சமூகமொன்றை உருவாக்க வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். பாதாள உலக கோஷ்டிகள், குடு வியாபாரிகளை இல்லாதொழிப்பதை போலவே அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் உருவாவதற்கும் நாம் இடமளிக்க மாட்டோம். மூன்று தசாப்த யுத்தத்தில் 27ஆயிரத்திற்கு அதிமான இராணுவத்தை இழந்தும், பல ஆயிரம் வீரர்களை அங்கவீனர்களாக்கியும் இந்த நாட்டினை மீட்டெடுத்தோம். 

அவ்வாறு இருக்கையில் இந்த சபையில் உள்ள ஒருசில தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள இனத்திற்கு எதிராகவும், தமிழ் மக்கள் மனங்களில் சிங்களவர் தொடர்பில் வெறுப்பையும், கோவத்தையும் வளர்க்கும் விதத்தில் மோசமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

 தமது பிரதேசங்களின் அபிவிருத்திகள், தேவைகள் குறித்து பேசாது எந்த வேளையிலும் சிங்கள மக்களுக்கும், இராணுவத்திற்கு எதிரான அவமான செயற்பாடுகளை உருவாக்கும் கருத்துக்களையே முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறான கீழ்த்தரமான தமிழ் அரசியல் வாதிகளின் மோசமான அரசியல் கருத்துக்களின் காரணமாகவே அன்று தமிழ் இளைஞர்கள் ஆயுதம் எந்த நேர்ந்தது. 

ஆனால் நாம் உலகில் மிக மோசமான பயங்கரவாதிகளை அழித்த இனமாகும். உலகில் வேறெந்த நாடுகளும் பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி கண்டதில்லை. பயங்கரவாதத்தில் இடைப்பட்ட வர்க்கம் என எவரும் இல்லை, ஒன்று பயங்கரவாதி அல்லது பொதுமகன். 

எனவே மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் ஒன்று தலைதூக்கினால் இவர்கள் அனைவரும் பயங்கரவாத பட்டியலுக்குள்ளேயே விழுவார்கள். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால் தமிழ் மக்கள் மத்தியில் விரோதத்தை ஊக்குவிக்கும் இவர்கள் அனைவருமே பொறுப்புக்கூற வேண்டும்.

இன்று சபையில் மனித உரிமைகள் பேசும் தமிழர் தரப்பு, அன்று 2002 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை காலத்தில் விடுதலைப்புலிகள் வீடுகளுக்குள் சென்று சிறுவர்களை தூக்கி சென்ற வேளையில் மனித உரிமைகள் இவர்கள் கண்களுக்கு தெரியவில்லையா? அப்போது இவர்கள் எல்லோரும் எங்கே இருந்தார்கள். 

பாடசாலைகளில் உள்ள மாணவர்களை வலுக்கட்டாயமாக ஊர்வலங்களுக்கு அழைத்து சென்ற வேளையில், அப்பாவி தமிழ் தாய்மார்களின் ஏக்கத்தை பொருட்படுத்தாது பிள்ளைகளை கடத்திய வேளையில், புலிகளுக்கு எதிரானவர்களை சுட்டுக்கொண்ட வேளையில், கப்பம் கேட்டு வியாபர்களை கொலைசெய்த வேளையில் இந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எங்கே சென்றனர். 

யுத்த காலத்தில் தமிழர்களை நாமே காப்பாற்றினோம், அப்போதெல்லாம் இன்று பேசும் ஒருவரைக்கூட நாம் பார்க்கவில்லை. மூன்று இலட்சம் பொதுமக்களை பணயக்யக்கைதியாக பிரபாகரம் வைத்திருந்த வேளையில், தப்பித்து செல்பவர்களை  கொன்று குவித்த வேளையில் இவர்கள் எவருமே வாய் திறக்கவில்லை.

இரண்டு இலட்சத்து 95 ஆயிரம் தமிழர்களை பாதுகாத்துக்கொண்டே யுத்தத்தை முடித்தோம், உலகிலேயே மிகப்பெரிய மனிதாபிமான போராட்டத்தை முன்னெடுத்த இராணுவம் எமது இராணுவம் என்றே உலகம் கூறுகின்றது. 

இவர்களை குறுகிய காலத்தில் மீள் குடியேற்றினோம். ஒரு யோகட் கோப்பையை கூட அந்த நேரத்தில் தமிழ் அப்பாவி பிள்ளைகளுக்காக வாங்கிக்கொடுக்க முன்வராத தமிழ் தலைவர்கள் இன்று அவர்களின் மனித உரிமைகள் குறித்து பேசுகின்றனர். 

எனவே தமிழர்களின் உரிமைகள், தமிழர்களின் தேவைகள் குறித்து வாய் திறக்க இங்குள்ள தமிழ் தலைவர்கள் எவருக்கும் உரிமை இல்லை. புலம்பெயர் அமைப்புகளிடம் இருந்து பணம் பெற்றுக்கொள்ள நாடகமாடும் இவர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்க முடியாது என சபையில் தெரிவித்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *