அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பிடனுக்கு முறையாக ஆட்சி அதிகார மாற்றம் செய்யத் தொடங்க, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் தனது தோல்வியை ஏற்க தயங்கிவந்த ட்ரம்ப், பிடன் பதவியேற்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றை முறையாகச் செய்ய, ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (GSA) எனும் முக்கியமான அரசாங்க அமைப்பிடம் பரிந்துரைத்துள்ளார்.
எனினும், டொனால்ட் ட்ரம்ப், தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதாக இதுவரை முறைப்படி ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் சட்ட நடவடிக்கைகளில் ட்ரம்ப் அணியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்ட அதிகார மாற்றத்தை முன்னின்று செய்யும் ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பின் நிர்வாகிகள் இதற்கு முன்பு வரை ஜோ பிடனை தேர்தல் வெற்றியாளராக உறுதிப்படுத்தாமல் இருந்து வந்தனர்.
ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அதிபர் அதிகார மாற்றங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த நடவடிக்கைகளை அமைப்பு தொடங்கும் என்றும் ட்ரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பிடனுக்கு 6.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஜி.எஸ்.ஏ நிர்வாகி எமிலி மர்ஃபி தெரிவித்துள்ளார்.
ஜோ பிடன் அணியினர், இந்த அதிகார மாற்றத்தின் தொடக்கத்தை வரவேற்றுள்ளனர்.
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியான ஜோ பிடன், அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்பார் என தெரிகிறது.