காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதற்குக் கிடைத்த முறைப்பாடுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் காணாமல்போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலொன்றை வெளியிட்டிருக்கிறது.
இப்பட்டியலை கொழும்பிலுள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திலும் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மாத்தறையிலுள்ள அதன் பிராந்திய அலுவலகங்களிலும் பார்வையிட முடியும்.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கு நேரடியாகக் கிடைத்த முறைப்பாடுகள், மாவட்ட செயலகங்கள் மூலமாகப் பெறப்பட்டு, பின்னர் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஊடாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் வேண்டுகோளின்பேரில் ஆயுதப்படையினரால் வழங்கப்பட்ட போரில் காணாமல்போன படையினரின் பட்டியல் ஆகிய விபரங்களில் அடிப்படையிலேயே மேற்படி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபரங்கள் இதுவரையில் அதிகளவிலான முறைப்பாடுகள் பெறப்பட்டதும் விரைவில் வெளியிடப்படவுள்ளதுமான மட்டக்களப்பு மாவட்டம் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் வசிக்கும் காணாமல்போனோரின் உறவினர்களிடமிருந்து பெறப்பட்டதாகும்.
மேற்படி பட்டியலில் காணாமல்போனவருக்கென காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் ஒதுக்கப்பட்ட உசாத்துணை இலக்கம், காணாமல்போனவரின் பெயர், காணாமல்போன அல்லது காணாமலாக்கப்பட்ட திகதி, காணாமல்போன நபர் இறுதியாக வசித்த மாவட்டம் ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதேவேளை போரினால் காணாமல்போன ஆயுதப்படையினர் தொடர்பான பட்டியலில் காணாமல்போனவருக்கென காணாமல்போனோர் அலுவலகத்தினால் ஒதுக்கப்பட்ட உசாத்துணை இலக்கம், காணாமல்போனவரின் பெயர், காணாமல்போன திகதி, முப்படையினரால் குறித்த நபருக்கு வழங்கப்பட்டிருந்த இலக்கம், காணாமல்போனவரின் தரவரிசை, காணாமல்போன இடம், காணாமல்போனவரின் படைவகுப்பு (இராணுவத்தைச் சேர்ந்தவராயின்) ஆகிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
காணாமல்போனவர்களின் தகவல்களை ஒன்றிணைக்கும் செயன்முறையின் ஓரங்கமாகவே இந்தப் பட்டியல் பிரசுரிக்கப்பட்டிருப்பதாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் தற்போது பிரசுரிக்கப்பட்டிருக்கும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கும் தகவல்களை காணாமல்போனோரின் உறவினர்கள் மீளாய்வு செய்வதுடன், ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவற்றைத் தமக்கு அறிவிக்கமுடியும் என்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் குறிப்பிட்டிருக்கிறது.
அத்தோடு அலுவலகத்திற்கு முறைப்பாடுகளைச் சமர்ப்பித்தும், இந்தப் பட்டியலில் தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை என்று கருதும் காணாமல்போனோரின் உறவினர்களும் அதனை அலுவலகத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.