மாவீரர் தின அனுஷ்டிப்பிற்கு நீதிமன்றங்களால் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரத்தை போற்றும் வகையில் சமூக வலைத்தளங்களில் இடுகைகளை பதிவேற்றம் செய்த நால்வர் ஏறாவூர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் பகுதியில் வைத்து நேற்றைய தினம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைதானவர்கள் செங்கலடி பகுதியை சேர்ந்தவர்கள் என காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மாவீரர் நாளை பொதுவெளியில் மக்கள் ஒன்றுத்திரண்டு அனுஷ்டிப்பதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு நீதிமன்றங்களில் இதுதொடர்பான வழக்குகளில் சட்டமா அதிபர் திணைக்களம் நேரடியாக முன்னிலையாகி தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளது.
மேலும் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கு உறவினர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களும் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன.
எவ்வாறாயினும், இந்தமுறை தத்தமது வீடுகளில் இருந்து பொதுமக்கள் மாவீர் நாளை அனுஷ்டிக்குமாறு, தமிழ் தேசிய பரப்பில் இயங்குகின்ற கட்சிகள் ஒன்றாக அறிவுறுத்தியுள்ளன.
இதேவேளை, வடக்கில் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்விற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.