எத்தியோப்பியாவில் வட டீக்ரே பிராந்தியத்தின் மீது அந்நாட்டின் மத்திய அரசு நடத்திவரும் போரில் டீக்ரே பிராந்தியத் தலைநகரம் மிகாய்லி அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக அறிவித்துள்ளார் பிரதமர் அபிய் அகமது.
பிராந்தியத்தின் ஆளும் கட்சியான டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு (டீ.ம.வி.மு.) எதிரான தாக்குதலை தீவிரப்படுத்திய மத்திய அரசுப் படைகள், முன்னதாக மிகாய்லி நகரத்தில் நுழைந்திருந்தன.
ராய்டர் செய்தி முகமையிடம் பேசிய டீ.ம.வி.மு. தலைவர், தெப்ரஸ்தீயான் கெப்ரமீக்கேல் சுயநிர்ணய உரிமைக்கான உரிமையைக் காக்க தொடர்ந்து போராடப்போவதாகவும், ஊடுருவல்காரர்களை கடைசி வரை எதிர்த்துப் போராடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சண்டையில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான எத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது டீக்ரே பிராந்தியத்தின் மீது சுமார் ஒரு மாதம் முன்பு ராணுவ நடவடிக்கையை அறிவித்தார்.
இப்பிராந்தியத்தின் ஆளும் கட்சியான டீ.ம.வி.மு. தலைநகர் மிகாய்லியில் உள்ள எத்தியோப்பிய ராணுவத்தின் வடக்கு கட்டளைத் தளத்தை தாக்கியதாக குற்றம்சாட்டி இந்த தாக்குதலைத் தொடங்கினார் அவர்.
மிகாய்லியைப் பிடித்ததோடு ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதாகவும் அபிய் அகமது அறிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்ட அவர் “‘டீக்ரே பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கை நிறைவடைந்ததையும், நிறுத்தப்படுவதையும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியுள்ளார்.
பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் உரிய கவனத்தோடு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய அவர், டீ.ம.வி.மு. கைது செய்த சிப்பாய்கள் விடுவிக்கப்பட்டதாகவும், விமான நிலையமும், பிராந்திய அலுவலகங்களும் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அறிவித்தார்.
அழிக்கப்பட்டவற்றை மறுகட்டுமானம் செய்வதும், போரினால் வெளியேறியவர்களை மீண்டும் திரும்பிக் கொண்டுவருவதும்தான் தற்போது முன்னால் இருக்கும் பணி என்றும் அவர் தெரிவித்தார்.