மிங் (Mink) விலங்குகள் இன அழிப்பு விவகாரம் டென்மார்க் அரசுக்குத் தொடர்ந்தும் பெரும் தலையிடியாக மாறியிருக்கிறது.
படம்: விலங்குகள் அழிக்கப்பட்டதால் வெறிச்சோடிக் காணப்படும் மிங் பண்ணை ஒன்றுக்கு விஜயம் செய்த பின்னர் TV2 தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த டெனிஸ் பிரதமர் Mette Frederiksen இடையில் பல தடவைகள் கண்கலங்கிய காட்சி
பாரிய கிடங்குகளில் லட்சக் கணக்கில் புதைக்கப்பட்ட விலங்குகள் அமுக்கம் காரணமாக ஊதிப் பெருத்து புதை குழிகளில் இருந்து மேலெழுகின்றன. இதனால் புதிதாகப் பெரும் சுகாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
புதை குழிகளை மீண்டும் தோண்டி விலங்குகளை வெளியே எடுத்து பாதுகாப்பான வேறு வழி முறைகளில் புதிய இடத்தில் அவற்றை எரித்து அழிக்க வேண்டும் என்று நாட்டின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
டென்மார்க்கின் வடக்கு யூலான்ட் (Jutland) பிராந்தியத்தில் அண்மையில் மிங் பண்ணைகளில் வைரஸ் தொற்று காரணமாக லட்சக்கணக்கில் விலங்குகள் கொல்லப்பட்டு இராணுவப் பயிற்சித் தரவை ஒன்றின் நிலப்பகுதியில் பாரிய குழிகள் தோண்டப்பட்டு அவற்றில் புதைக்கப்பட்டமை தெரிந்ததே.
அவ்வாறு புதைக்கப்பட்ட விலங்குகளே குழிகளில் இருந்து மெலெழுந்து வெளியேறி உள்ளன.
அழுகிய விலங்குகளில் இருந்து வெளியேறும் நைட்ரஜென்(nitrogen) மற்றும் பொஸ்பரஸ் (phosphorus) வாயுக்களின் அமுக்கத்தால் அவை உருப்பெருத்து மேலெழுவதாக யூலான்ட் ஊடகங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது.
பாரிய இரண்டு விலங்குப் புதை குழிகள் தோண்டப்பட்ட இடத்துக்கு அருகே நீரேரி ஒன்றும் குடி தண்ணீர் மையமும் அமைந்துள்ளன. இதனால் புதைகுழிகளில் இருந்து மாசுக்கள் நீர் நிலையில் கலக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் புதிய வைரஸ் பரவும் அச்சம் காரணமாக மில்லியன் கணக்கான மிங் விலங்குகளை ஒரேயடியாகக் கொல்ல டென்மார்க் பிரதமர் எடுத்த தீர்மானம் அரசியல் மற்றும் சட்ட ரீதியாக அவரது அரசை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது.
இந்த விவகாரம் தொடர்பான சர்ச்சைகளால் நாட்டின் விவசாய அமைச்சர் பதவி விலக நேர்ந்தது.
அதிகளவில் தொற்றுக்கு இலக்காகிவரும் மிங் விலங்குகள் அவற்றின் உடலில் மரபு மாறிய புதிய வைரஸ் கிருமிகளைக் காவி அவற்றை மனிதர்களுக்குப் பரப்பும் ஆபத்து இருக்கிறது என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதனால் ஜரோப்பிய நாடுகள் பலவற்றில் மிங் பண்ணைகள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப் பட்டுள்ளன. பிரான்ஸில் உள்ள நான்கு மிங் பண்ணைகளில் ஒன்றில் தொற்று ஏற்பட்டதால் சுமார் ஆயிரம் விலங்குகள் கொன்றழிக்கப்பட்டுள்ளன.
போலந்து, லித்துவேனியா நாடுகளிலும் மிங் பண்ணைகளில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.