கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்யுமாறு வலியுறுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியை வலுவிலக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த மனுக்கள் உயர்நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்கள் தகனம் செய்யப்படுவதை சவாலுக்கு உட்படுத்தி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கொவிட்-19 தொற்றால் உயிரிழந்த 2 முஸ்லிம்களின் உறவினர்கள் உள்ளிட்ட 11 தரப்பினரால் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முர்து பெர்னாண்டோ மற்றும் பிரித்தீ பத்மன் சூரசேன ஆகியோர் கொண்ட நீதியரர் குழாம் முன்னிலையில் நேற்று ஆராயப்பட்டன.
இதன்போது மனுதாரர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்தின், கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதால் வைரஸ் பரவும் என இதுவரை எந்த விஞ்ஞான ரீதியான சாட்சிகளும் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிட்டார்.
இதனையடுத்து சட்டமா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே, இந்த மனுக்கள் ஊடாக நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையானது சுகாதார விடயம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இது தொடர்பில் சுகாதார நிபுணர்களினால் மாத்திரமே தீர்மானம் மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டிய பிரதி மன்றாடியார் நாயகம், அது தொடர்பில் நீதிமன்றத்திற்கு தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள முடியாது என குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் பரவும் விதம் தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தொடர்ந்தும் ஆய்வுகளை முன்னெடுத்துவரும் பின்னணியில் கொவிட்-19 தொற்றால் மரணப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதால் அந்த வைரஸ் பரவாது என மன்றில் மனுதாரர்கள் முன்வைக்கும் கருத்துக்களை ஏற்க முடியும் எனவும் பிரதி மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.