யாழ்.மாவட்டத்தில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2,220 பேர், சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில் அரசாங்க அதிபர் க.மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று வரை தாக்கத்திற்கு உட்பட்டுள்ளார்கள். அதனைவிட 1010குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மேலும், 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220 பேருக்கு அரசினால் வழங்கப்படுகின்ற நிவாரணங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றோம்.
தற்போது மாவட்ட செயலகத்திற்கு 12.4மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளது.அந்த நிதியின் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றோம். இதனைவிட நாளாந்தம் தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களில் விபரங்களை உரிய இடங்களுக்கு அனுப்பி, நிதியினை பெற்று நிவாரணப் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.
மேலும், யாழ் மாவட்டத்தில் தற்பொழுது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல இதர செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் அனைத்து செயற்பாடுகளும் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய செயற்படுத்தப்படவேண்டும். இருந்தபோதிலும்,பொது மண்டபங்கள் மற்றும் ஏனைய ஒன்றுகூடல்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது .
அத்துடன், தற்போதைய நிலையில் ஏனைய மாவட்டங்களை விட யாழ்ப்பாண மாவட்டம் சற்று கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது. எனினும் இனிவரும் காலங்களிலும் பொதுமக்கள் விழிப்பாக இருந்து இந்த கட்டுப்பாட்டினை தொடர்ந்து பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.