இராணுவத்தில் புதிய நுட்ப பயற்சிகளை அளித்தமையே யுத்த வெற்றிக்கு காரணமெனத் தெரிவித்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, தான் தனிப்பட்ட முடிவுகளையும் பிரயத்தனங்களையும் மேற்கொண்டதனாலேயே, பயங்கரவாத்தை தோற்கடிக்க முடிந்தது என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் இன்று உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், யுத்தத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக தான் உறுதியளித்தவாறு அதனை முடிவுக்கு கொண்டுவந்தேன். திட்டமிட்ட செயற்பாடுகளே அதற்குக் காரணம் எனவும் கூறினார்.
அத்துடன், இறுதி யுத்தத்தின்போது 45000 பொதுமக்கள் கொலைசெய்யப்படடதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாகத் தெரிவித்த அவர், சுமார் ஐந்து, ஆறு ஆயிரம் பேர் வரை தவறுதலாக உயிரிழந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டதுடன், 270,000 பேரை பாதுகாக்க முடிந்ததாகவும் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட 12,000 பேருக்கு புனர்வாழ்வு அளித்ததாகவும் கூறினார்.
எனவே, புனரவாழ்வு வழங்கப்பட்டவர்கள் மீளவும் பயங்கரவாதத்தில் ஈடுபடாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.
2009 ஆண்டுக்குப் பின்னர் மாவீரர் தின நிகழ்வை நடத்த சந்தர்ப்பம் கிட்டாது என அன்று பயங்கரவாதிகளுக்கு கூறினேன். அதே நிலைப்பாட்டுடனேயே இன்றும் உள்ளேன் என சரத் பொன்சேகா கூறினார்.