அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது முறைகேடு புகார் காரணமாக ஓய்வு நீதிபதி தலைமையில் கமிஷன் அமைத்த தமிழக அரசின் செயலுக்கு மக்கள் நீதிமய்யம் கமல் கடும் கண்டனம் தெரிவித்து உயர் கல்வி அமைச்சர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சை எழுந்தது. தமிழரல்லாத ஒருவரை நியமிப்பதன் அவசியம் என்ன எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோன்று பல்கலைக்கழகம் உயர் சிறப்பு அந்தஸ்தை அடைவது குறித்து மத்திய அரசுக்குத் தன்னிச்சையாக அவர் கடிதம் எழுதிய விவகாரமும் சர்ச்சையைக் கிளப்பியது.
தமிழக எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. தன்னிச்சையாகக் கடிதம் எழுதியது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
இந்நிலையில் சூரப்பா மீது ஊழல் புகார், பணி நியமனங்களில் பணம் பெற்றது, கல்லூரிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடு, தனது மகளை முறைகேடாகப் பணிக்கு அமர்த்தியது, தகுதியற்றவர்களைப் பணி நியமனம் செய்தது குறித்துப் பல்வேறு புகார்கள் தமிழக அரசுக்கு வந்தன. இதையடுத்து தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்தது.
சூரப்பாவை பணி இடை நீக்கம் செய்யவேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்தன. இந்நிலையில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் சூரப்பாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். ட்விட்டர் மூலம் காணொலி வெளியிட்டுள்ள அவர் ஆளுங்கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.
கமல்ஹாசன் ட்விட்டர் காணொலி பதிவு வருமாறு:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டபோது தமிழகத்தில் இதற்கு தகுதியானவர்கள் இல்லையா என்ற கேள்வியை நாம்தான் எழுப்பினோம். அந்த கேள்வி இப்போதும் தொக்கி நிற்கிறது அதில் மாற்றம் இல்லை, ஆனால் வந்தவரோ வளைந்துக்கொடுக்காதவர், அதிகாரத்துக்கு முன் நெளிந்துக்குழையாதவர்.
தமிழக பொறியியல் கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்தவேண்டும் என முனைந்தவர். பொறுப்பாளர்கள் நம் ஊழல் திலகங்கள், வளைந்துக் கொடுக்கவில்லையென்றால் ஒடிப்பதுதானே இவர்கள் வழக்கம், எவனோ அடையாளத்தை மறைத்துக்கொண்டு ஒரு பேடி எழுதிய மொட்டைக் கடிதத்தின் அடிப்படையில் விசாரணைக்குழு அமைத்திருக்கிறார்கள்.
மொட்டையில் முடிவளராததால், மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் கொடுத்து ஏதேனும் வில்லங்கம் சிக்குமா என கடைப்போட்டு காத்திருக்கிறார்கள். முறைகேடாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கி இருந்தவர்களையும், பல்கலைக்கழக வாகனங்களை பயன்படுத்தியவர்களையும் விசாரித்து விட்டீர்களா?
உயர் கல்வி அமைச்சர் 60 லட்சம் வாங்கிக்கொண்டுத்தான் பேராசிரியர்களை பணி நியமனம் செய்கிறார் என பாலகுருசாமி ஒரு வார இதழில் குற்றம் சாட்டினாரே அளித்தாரே விசாரித்துவிட்டீர்களா? உள்ளாட்சித்துறை, பால்வளத்துறை, கால்நடைத்துறை, சுகாதாரத்துறை என அத்தனைத்துறை அமைச்சர்களும் ஊழலில் திளைக்கிறார்கள் என சமூக செயற்பாட்டாளர்களும், எதிர்க்கட்சியினரும், ஊடகங்களும் அன்றாடம் குரல் எழுப்புகிறார்களே அதை விசாரித்துவிட்டீர்களா?
தேர்வு நடத்துவதும், தேர்ச்சி அறிவிப்பதும் கல்வியாளர்களின் கடமை, கரைவேட்டிகள் இங்கும் மூக்கை நுழைப்பது ஏன். இதுவரை காசு கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள் இப்போது மதிப்பெண்களை கொடுத்து மாணவர்களை வளைக்க பார்க்கிறார்களா. சூரப்பாவின் கொள்கை நிலைப்பாடு அரசியல் செயல்பாடு குறித்து நமக்கு மாற்று கருத்துகள் இருக்கலாம். ஆனால் ஒருவன் தன் நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால், கமல்ஹாசன் ஆன நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டேன்.
நேர்மையாளர்களின் கூடாரமான மக்கள் நீதிமய்யம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. இது ஒரு கல்வியாளருக்கும் அரசியல்வாதிக்குமான பிரச்சினை இல்லை. நேர்மையாளர்களுக்கும், ஊழல்வாதிகளுக்குமான போர். ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் உன் வாழ்க்கையை அழிப்போம். அவதூறு பரப்பி உன் அடையாளத்தைச் சிதைப்போம் என சூரப்பாவுக்கும் அவர்போல் பணியாற்றுபவர்களுக்கும் விடுக்கும் எச்சரிக்கை.
சகாயம் தொடங்கி சந்தோஷ்பாபு வரை இவர்களால் வேட்டையாடப்பட்டவர்களின் பட்டியல் பெரிது. பேரதிகாரிகள் இவர்களோடு போராடி களைத்து விருப்ப ஓய்வு பெருகிறார்கள் என்றால் சாமானியனின் கதி என்ன? இதை இனிமேலும் தொடர் விடக்கூடாது. இன்னொரு நம்பி நாராயணன் இங்கு உருவாக விடக்கூடாது.
நேர்மைக்கும் ஊழலுக்குமான மோதலில் அறத்தின் பக்கம் நிற்பவர்கள் தங்கள் மவுனம் கலைத்து பேசியே ஆகவேண்டும்.
குரலற்றவர்களின் குரலாக நாம்தான் மாறவேண்டும். நேர்மைதான் நமது சொத்து அதையும் விற்று வாயில் போட்டுவிடத் துடிக்கும் இந்த ஊழல் திலகங்களை ஓட ஒட விரட்ட வேண்டும். வாய்மையே வெல்லும்”.
இவ்வாறு பேசியுள்ளார்.