அண்மையில் சஜித் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவை சந்தித்த மல்கம் ரஞ்சித் கூறுகையில் முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தினை முக்கியமானதாக கருதலாம் ஆனால் அதற்காக அதனை இலங்கையின் சட்டமாக அதனை அர்த்தப்படுத்த முடியாது என்றும், ஷரியா சட்டத்தினை ஏனைய சமூகங்களின் மீது திணிக்கலாம் என்றோ அல்லது அதனை ஏனைய சமூகங்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கோ அச்சுறுத்துவதற்கோ பயன்படுத்தலாம் என்றோ முஸ்லீமள் கருதக்கூடாது எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களின் இக்கூற்று ஷரீயா சட்டம் என்றால் என்ன என்றே சரியாக அவர் அறியாமல் சொல்லும் தான்தோன்றித்தனமான கருத்தாகவே நாம் காண்கிறோம் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.
கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களின் ஷரியா சட்டம் தொடர்பிலான கருத்துக்கு விளக்கமளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவ்வறிக்கையில் கருத்து தெரிவித்த அவர்.
இஸ்லாத்தை பொறுத்தவரை பல சட்டங்கள் உள்ளன. சிவில் சட்டம், வணக்க வழிபாடுகள் சட்டம், கொடுக்கல் வாங்கல் சட்டம், ஷரீயத் குற்றவியல் சட்டம் என அவை உள்ளன.
ஷரீயா சட்டம் என்பது குற்றவியல் சட்டம் என்ற வகையில் அதனை முஸ்லிம் ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்த வேண்டுமென்றுதான் இஸ்லாம் கூறுகிறதே தவிர, முஸ்லிம் பொதுமக்கள் அதனை தமக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றோ, அடுத்தவர் மீது திணிக்க வேண்டும் என்றோ சொல்லவில்லை. அதிலும் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் ஷரீயத் சட்டத்தை கடைப்பிடிக்க ஏவவுமில்லை.முஹம்மது நபிகள் நாயகம் அவர்களும் முஸ்லிம்களும் மக்காவில் சிறுபான்மையாக வாழ்ந்த போது அன்னார் ஷரீயத் சட்டத்தை அமுல் படுத்தவில்லை.
ஷரீயத் சட்டம் என்பது கொலைக்கு கொலை, களவெடுத்தவன் கையை வெட்டுதல், கற்பழிப்புக்கு மரண தண்டனை, போதை வஸ்த்து வியாபாரத்துக்கு மரண தண்டனை போன்றவைதான். இதனை அமுல்படுத்தும் படி இலங்கை முஸ்லிம்கள் யாரும் சொல்லவில்லை. ஆனால் நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பதால் முஸ்லிம் அல்லாதவர்களும் கூட சமூக வலையத்தளங்களில் அத்தகைய ஷரீயத் சட்டங்கள் மூலமே குற்றங்களை தடுக்கலாம் என சொல்வது மல்கம் ரஞ்சித்துக்கு தெரியாதா?
ஆனாலும் ஓரிறைவனை மட்டும் கடவுளாக விசுவாசம் கொள்ளாத மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் ஷரீயத் சட்டங்களை கொண்டு வரமுயலக்கூடாது என்றும் இதன் அடிப்படையில் இந்த நாட்டில் தூக்குத்தண்டனை நிறைவேற்றக்கூடாது என்றும் உலமா கட்சி ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் பல காலமாக சொல்லி வருகிறோம்.
நமது நாட்டில் இருக்கும் சட்டம் கூட கிறிஸ்தவ பிரித்தானியர் கொண்டு வந்த சட்டங்கள்தானே தவிர பௌத்த மக்களால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் அல்ல. அதுவும் கிறிஸ்தவ, ஐரோப்பிய கலப்பு ஷரீயத் சட்டங்கள்தான் என்பது கிறிஸ்தவ கர்தினாலுக்கு தெரியாதா? அத்துடன் ஈஸ்டர் தாக்குதலுக்கும் ஷரீயத் சட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்பாவி மக்களை கொல்லக்கூடாது என்று புனித குர்ஆன் மிகத்தெளிவாக சொல்கிறது.
ஈஸ்டர் தாக்குதல் என்பது திகன, கண்டி, பள்ளிவாயல் தாக்குதல்கள் போன்ற தாக்குதல் காரணமாக ஆத்திரத்தில் இருந்த சில முஸ்லிம் இளைஞர்களை முஸ்லிம் அல்லாத வெளிநாடுகள் அவர்களுக்கு மூளைச்சலவை செய்து நடத்தியிருக்கலாம் என்றே இது சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவில் பலரும் சொல்லி வருவதை ஊடகங்களில் காண்கிறோம்.
ஸஹ்ரான் போன்றோர் உருவானமைக்கு இஸ்லாம் பற்றி கற்றுக்கொடுக்கும் பாடசாலைகள் காரணம் என்றால் பண்டாரநாயக்கவை சுட்ட ஹாமதுரு, பிரபாகரன், ஜே வி பி ரோஹன போன்றோரின் பயங்கரவாத செயலுக்கு அவர்கள் கல்வி கற்ற அரச பாடசாலைகளா காரணம் என கர்தினாலிடம் கேட்கிறோம்.
ஆகவே சில முட்டாள் அரசியல்வாதிகள் உண்மை எதுவென தெரியாமல் தமது அரசியல் லாபத்துக்காக, ஷரீயத், மதுரசா என்றெல்லாம் இனவாதம் கக்குவது போன்று நாட்டில் இனங்களுக்கும் மதங்களுக்குமிடையில் ஏசு நபியின் அன்பையும், ஆதரவையும் போதிக்கும் கடமையில் உள்ள மல்கம் ரஞ்சித் அவர்கள் பேசுவது கவலை தரக்கூடியதும் கண்டிக்கத்தக்கதுமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.