இரண்டு மீனவர்களுக்கும் இடையில் சண்டை மூழுவதையே கடற்படை விரும்புன்றது

இரண்டு மீனவர்களுக்கும் இடையில் சண்டை மூழுவதையே கடற்படை விரும்புன்றது

இலங்கை மீனவர்களுக்கும், தமிழ் நாட்டுமீனவர்களுக்கும் இடையில் சண்டை ஏற்படுத்துவதே, இலங்கைக் கடற்படையின் எண்ணமாக இருக்கின்றது.

அவ்வாறு இரு தரப்பு மீனவர்களும் நேரடியாக மோதுவதன் மூலம் எமக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையில் இருக்கும் நல்லுறவை உடைக்க முடியும் என அவர்கள் எண்ணுகின்றார்கள். அதனாலேயே எல்லை கடந்து வரும் தென் இந்திய மீனவர்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதிருக்கின்றார்கள். இவ்வாறு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மீனவர்கள் நேற்று, தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடும் இந்தியமீனவர்களை துரத்துவதற்காக படகுகளில் கடலுக்குச் செல்லத் தயாராகியிருந்தனர். அங்கு மீனவர்களுடன் இணைந்திருந்த ரவிகரன், அங்கு வருகைதந்த அரச அதிகாரிகளிடம் பேசும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்கள் தமது நாட்டின் எல்லைக் கடந்து எமது கடற்பரப்பிற்குள் நுழைகின்றனர். இந்த விடயத்தினை இலங்கைக் கடற்படையினர் கண்டுகொள்ளாதிருக்கின்றனர்.

இதேவேளை இலங்கை கடற்பரப்புக்குள் அத்து மீறி நுழைந்து கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடும் இந்திய இழுவைப் படகுகளுக்கு கடலிலே இலங்கைக் கடற்படையினர் பாதுகாப்பு வழங்குவதாகவும், அவர்களுடைய கடற்றொழில் செயற்பாடுகள் முடிந்ததும் இந்தியக் கடல் எல்லை வரையில் இந்திய மீனவர்களுக்கு இலங்கைக்கடற்படை பாதுகாப்பாக சென்று வருவதனை எமது மீனவர்கள் அவதானித்தாகவும் என்னிடம் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவைப் பொறுத்தவரையில் கொக்கிளாய் தொடக்கம் சுண்டிக்குளம் வரையான கடற்பரப்பில் எமது மீனவ சமூகம் மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில் எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவர்கள் யாரிடம் முறையிடுவது? மாவட்ட செயலர் மற்றும் நீரியல்வளத் திணைக்கள அதிகாரியிடம்தானே முறையிடவேண்டும்.

இதனை விட எமது மீனவர்கள் ஏற்கனவே தென்னிலங்கை மீனவர்களுடைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படியாக அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கும்போது, இறால் தொழிலை நம்பியே அவர்கள் இருக்கின்றார்கள். தற்போது இந்திய இழுவைப்படகுகளால் இறால் தொழில் முற்றாகப் பாதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் அரச அதிகாரிகளான நீங்கள் இப்பிரச்சினைக்குரிய தீர்வைப்பெற்றுத்தரப் போகின்றீர்களா, அல்லது நாங்கள் நடவடிக்கை எடுக்கவா?

முல்லைத்தீவு மாவட்ட மக்கள் சோரம்போய்விட்டார்கள் என்று எண்ணுகின்றீர்களா? எமது முல்லைத்தீவு மாவட்ட மக்கள் எதற்கும் துணிந்தவர்களாவர். நாம் எத்தனையோ இறப்புக்களையும் சந்தித்துள்ளோம். எனவே உரிய அதிகாரிகள் இப்பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுத்தர முன்வாருங்கள்.

எமது கண்ணுக்கெட்டிய தூரத்தில் இந்திய மீனவர்கள் வந்து, முல்லைத்தீவுக் கடற்பரப்பில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இது கடற்படையின் கண்களுக்குத் தெரியவில்லையா.

கடற்படையினருக்கு கடலினைக் கண்காணிப்பதற்கு இயலவில்லையா? நாங்கள் எமது கடலினைப் படை அமைத்து நாமே பார்த்துக்கொள்வோம். எமது மீனவர்கள் அதற்குத் தயாராக இருக்கின்றார்கள்.

இலங்கைக் கடற்படையை பிச்சைக்கார கடற்படை என்றே சொல்லவேண்டும். எமது மீனவர்களை தமிழ் நாட்டு மீனவர்களுடன் சண்டையிட செய்வதே இவர்களுடைய நோக்கம். அதற்காகவே இவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள்.

எல்லை தாண்டி எமது கடற்பகுதிக்கு வரும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையின் கண்களுக்குத் தெரிவதில்லை. மாறாக எமது மீனவர்கள் தொழிலுக்காக கடலுக்குச் செல்லும்போது அவர்கள் மஞ்சள், கஞ்சா கடத்துகின்றார்களா என அச்சுறுத்தும் வகையில் கடலில் பரிசோதனை செய்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *