ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீதான நம்பிக்கையை நாட்டு மக்கள் இழந்துள்ளனர். மஹிந்தவுக்கு ஏற்பட்ட நிலைமையே கோட்டாபயவுக்கும் ஏற்படும்என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே சுட்டிக்காட்டினார்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இலங்கையில் 1946ஆம் ஆண்டு உதயமான ஐக்கிய தேசியக் கட்சி, 1951ஆம் ஆண்டு உருவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை இன்று நாட்டு மக்களின் மனங்களில் இருந்து நீங்கிவிட்டன. மக்கள் மாறவில்லை. ஆனால், மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படாததாலேயே இந்த நிலைமை ஏற்பட்டது.
புதியதொரு அரசியல் கட்சியே தற்போது நாட்டை ஆள்கின்றது. பிரதான எதிர்க்கட்சியாக இருப்பதும் புதிய கட்சியே. ஆனால், மொட்டு அரசுக்கு தற்போது இருக்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் எதிர்காலத்தில் இருக்குமா என்பதைக் கூற முடியாது. மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்கவே முடியாது என்றனர். 2015 இல் என்ன நடந்தது?
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானபோது நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை இன்று இல்லாமல்போயுள்ளது. ஊழல்கள் இடம்பெற ஆரம்பித்துள்ளன. புதிதாக இரண்டு அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த அமைச்சுக்களுக்கு நிதி கூட ஒதுக்கப்படவில்லை. எனவே, நாடு குறித்து சிந்திக்காமல் அரசியல் ரீதியிலேயே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. பொருளாதார தடைகளும் மறைக்கப்படுகின்றன”எனவும் குறிப்பிட்டுள்ளார்.