`சென்னையில் சி.பி.ஐ கஸ்டடியிலிருந்து 103 கிலோ தங்கம் மாயம்; சி.பி.சி.ஐ.டி விசாரணை!’ – என்ன நடந்தது?

`சென்னையில் சி.பி.ஐ கஸ்டடியிலிருந்து 103 கிலோ தங்கம் மாயம்; சி.பி.சி.ஐ.டி விசாரணை!’ – என்ன நடந்தது?

சென்னையில் சி.பி.ஐ கஸ்டடியிலிருந்து 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

`இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தினால், சி.பி.ஐ-யின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படும்’ என்ற சி.பி.ஐ-யின் வாதத்தை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் ஏற்க மறுத்துவிட்டார். இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி, `இது சி.பி.ஐ-க்கு அக்னிப் பரீட்சை போன்றது. தாங்கள் குற்றமற்றவர்கள் என்று சி.பி.ஐ நிரூபித்தால் பிரச்னையில்லை. ஒருவேளை குற்றமிழைத்திருந்தால், அதற்கான பின்விளைவுகளைச் சந்தித்துதான் ஆக வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ அல்லது தேசிய புலனாய்வு முகமையினர் விசாரணை நடத்தக் கோரிய சி.பி.ஐ-யின் வாதத்தையும் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இது குறித்துப் பேசிய நீதிபதி, `நீதிமன்றம் இது போன்ற இடையூறுகளை அனுமதிக்காது. அனைத்து போலீஸாரும் நம்பத் தகுந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

என்ன நடந்தது?

இந்தியக் கனிமங்கள் மற்றும் உலோக வர்த்தகக் கழக (MMTC) அதிகாரிகள், சென்னையைச் சேர்ந்த சுரானா நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் துணைபோவதாகப் புகார் எழுந்தது. வெளிநாடுகளிலிருந்து தங்கம், வெள்ளி போன்றவற்றை இறக்குமதி செய்யும் தொழிலில் சுரானா நிறுவனம் ஈடுபட்டுவந்தது.இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு சென்னையிலுள்ள சுரானா நிறுவனத்தில் சி.பி.ஐ நடத்திய அதிரடிச் சோதனையில் சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கக்கட்டிகள், நகைகள் உட்பட 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவை எடை பரிசோதிக்கப்பட்டு சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் சி.பி.ஐ முத்திரையுடன் மூடி சீல் வைக்கப்பட்டன. அந்த லாக்கர்களின் சாவிகள் சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாக சி.பி.ஐ தெரிவித்திருக்கிறது. ஆனால், அந்தச் சாவிகள் எப்போது நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன என்ற தகவல்களை சி.பி.ஐ தெரிவிக்கவில்லை.டந்த 2013-ம் ஆண்டு செப்டம்பரில் இந்த விவகாரத்தில் இரண்டாவது வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ, குறிப்பிட்ட தங்கம் முதல் வழக்கோடு தொடர்புடையதில்லை; வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை மீறியதாகப் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது வழக்கோடு தொடர்புடையது என்று கூறியது. சி.பி.ஐ-யின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ தங்கம், அது தொடர்பான ஆவணங்களை இரண்டாவது வழக்குக்கு மாற்றியது. அந்தத் தங்கம் ஏற்கெனவே லாக்கர்களில் இருப்பதால், நீதிமன்றம் அது குறித்து நேரடியாக ஆய்வு நடத்தவில்லை. ஆவணங்களில் மட்டுமே இந்த மாற்றம் நடந்தது.

இந்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டு விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்த சி.பி.ஐ, `குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரமில்லை’ என்று தெரிவித்தது. இதை அப்போது ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்திடம் (DGFT) ஒப்படைக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுரானா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சி.பி.ஐ நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்குத் தடை விதித்தது.

அதேநேரம், சுரானா நிறுவனம் தங்களுக்கு அளிக்க வேண்டிய ரூ.1,160 கோடி அளவுக்குக் கடன் தொகையைக் கட்டாமல் இருப்பதாக எஸ்.பி.ஐ வங்கி, அதற்கெதிரான நடவடிக்கைகளைத் தொடங்கியது. இது தொடர்பாக சி.பி.ஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த எஸ்.பி.ஐ வங்கி, நிலுவைத் தொகை கட்ட வேண்டியிருப்பதால், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியது. உயர் நீதிமன்றம் நேற்று (11-12-2020) பிறப்பித்த உத்தரவில், `நிலுவைத் தொகை தொடர்பாக சுரானா மற்றும் எஸ்.பி.ஐ வங்கி இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்கும் நிலையில், பறிமுதல் தங்கத்தை ஒப்படைக்கக் கோரி எஸ்.பி.ஐ தரப்பில் சி.பி.ஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது’ என்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. சுரானா நிறுவனத்தின் கோரிக்கைக்கு சி.பி.ஐ., வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தைக் கட்டுப்பாட்டில்வைத்திருக்கும் மத்திய வர்த்தக அமைச்சரகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இறுதியாகக் கடந்த 2019 டிசம்பரில் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம், எஸ்.பி.ஐ வங்கியின் முறையீட்டின் பேரில், இதில் தலையிட்டது. சி.பி.ஐ வசமிருக்கும் பறிமுதல் தங்கத்தை, சுரானா நிறுவனம் கடன் நிலுவைத் தொகை செலுத்த வேண்டிய ஆறு வங்கிகளிடம் பிரித்துக் கொடுக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்தச்சூழலில், வங்கி அதிகாரிகள் முன்னிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் லாக்கர்களைத் திறந்து சி.பி.ஐ. சோதனையிட்டது. தங்கக்கட்டிகள், நகைகளை எடை பரிசோதனை செய்தபோது 103.864 கிலோ அளவுக்குத் தங்கம் மாயமாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு சி.பி.ஐ பொறுப்பாக முடியாது என்று வாதிட்ட சிறப்பு வழக்கறிஞர், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டபோது, அவை மொத்தமாக எடையிடப்பட்டதாகவும், தற்போது தனித்தனியாக எடை பரிசோதிக்கப்பட்டதாகவும் வாதத்தை முன்வைத்தார். ஆனால், இந்த வாதத்தை ஏற்காத சென்னை உயர் நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டி இந்த விவகாரத்தில் திருட்டு வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி-யில் எஸ்.பி அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி ஒருவர், வழக்கு விசாரணையை ஆறு மாதத்துக்குள் முடிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *