ஈரானின் அதிஉயர் தலைவரான ஆயத்துல்லா அலி காமனெயியின் உடல்நிலை குறித்து வெளிவரும் சமீபத்திய வதந்திகள், அவர் ஆட்சி செய்ய முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டாலோ இறந்துவிட்டாலோ என்ன நடக்கும் என்பது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
81 வயதான ஆயலா அலி காமனெயி ,மத்திய கிழக்கின் மிக சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான இரானின் மிக அதிக அரசியல் அதிகாரம் கொண்டவர். அதனால் அவருக்குப் பின் அவரது பதவிக்கு யார் வருவார் என்பது இரானுக்கு மட்டுமின்றி அந்த பிராந்தியம் மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கும் மிகவும் முக்கியமானது.
அதிஉயர் தலைவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
ஈரானின்அதிஉயர் தலைவர் (1979ல் இரானின் இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இரண்டாவதாக இந்த பதவியை வகிப்பவர் அயதுல்லா காமனெயி), நிபுணர்களின் சட்டமன்றம் என்றழைக்கப்படும் 88 மத குருமார்களின் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
அதன் உறுப்பினர்கள் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இரானிய மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால் வேட்பாளர்கள் முதலில் கார்டியன் கவுன்சில் என்ற குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அந் தகார்டியன் கவுன்சிலின் உறுப்பினர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ அதிஉயர் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எனவே, அதிஉயர் தலைவர் இரு அமைப்புகளிலும் செல்வாக்கு செலுத்துபவராக திகழ்கிறார். கடந்த மூன்று தசாப்தங்களாக, தனது அடுத்த வாரிசைத் தேர்ந்தெடுப்பதில் அவரது வழிகாட்டலைப் பின்பற்றும் பழமைவாதிகள் பேரவைக்கு தேர்ந்தெடுப்பதை அலி காமனெயி உறுதிசெய்து வந்துள்ளார்.
ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டால், அதிஉயர் தலைவர் பதவியில் ஒருவர் வாழ்நாள் முழுவதும் நீடிக்கலாம்.
ஈரானின்அரசியலமைப்பின்படி அதிஉயர் தலைவர் என்பவர், ஷியா மதப்பிரிவின் மூத்த தலைவரா அறியப்படும் ஆயத்துல்லா ஆக இருக்க வேண்டும். ஆனால் அலி காமனெயி தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் ஒரு ஆயத்துல்லா இல்லாததால், அவருக்கு ஏற்றவாறு சட்டங்கள் மாற்றப்பட்டன.
எனவே, புதிய தலைவரை தீர்மானிக்கும்போது இந்த சட்டம் மீண்டும் திருத்தப்படுமா அல்லது அப்படியே நீடிக்குமா என்பது ஈரானின் அப்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும்
ஏன் இந்த பதவி முக்கியத்துவம் வாய்ந்தது?
ஈரானில் உட்சபட்ச அதிகாரம் கொண்டவராக அதன் அதிஉயர் தலைவர் விளங்குகிறார். உள்நாடு மட்டுமின்றி உலக நாடுகளுடனான ஈரானின் அணுகுமுறை, கொள்கைகள் உள்ளிட்டவற்றையும் இவரே இறுதி செய்கிறார்.
உலகின் மிக சக்திவாய்ந்த ஷியா நாடான இரான், அலி காமனெயியின் தலைமையில் மத்திய கிழக்கில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த முயன்றது.
அவரது மரணம் இப்பகுதியில் வரலாற்றின் போக்கை மாற்றுவது மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் எதிரொலிக்கக்கூடும்.
உதாரணமாக, இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விரோதப் போக்கு, அயதுல்லா கமேனியின் தனிப்பட்ட வெறுப்பால் பெரும் அளவிற்கு தூண்டப்பட்டது. இது இந்த நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக பதற்றம் மற்றும் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுத்தது.
இருப்பினும், ஈரானின் அதிஉயர் தலைவரை தேர்ந்தெடுக்கும் செயல்முறையை பார்க்கும்போது, எதிர்காலத்தில் அந்த பதவிக்கு யார் வந்தாலும், அலி காமனெயி பயணித்த பாதையிலேயே அவரும் தொடரக் கூடும் என்பதையே காட்டுகிறது.
அடுத்த அதிஉயர் தலைவராக யார் வரக்கூடும்?
ஈரானின் அரசியல் கட்சிகள் அடுத்த வாரிசை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளன. ஆனால் நெருக்கடியை தடுப்பதற்காக கிங் மேக்கர் போன்று செயல்படக்கூடிய ஒரு சக்திவாய்ந்த நபர் என்று யாரும் இல்லை.
தனது முன்னோடியுடன் ஒப்பிடுகையில் வேறுபட்ட பார்வையை கொண்டவராக அறியப்படும் அலி காமனெயி, தனது விசுவாசிகளின் தனிப்பட்ட வலைப்பின்னல் மூலம் தனது அரசியல் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டார். அவர்களில் பலர் இரானின் மிக சக்தி வாய்ந்த படையான புரட்சிகர காவல் படையை சேர்ந்தவர்கள்.
எனவே, தங்களது ஆதரவு இல்லாத வேட்பாளர் ஒருவர் அடுத்த அதி உயர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதை புரட்சிகர காவல்படையினர் தடுக்கவே முயற்சி செய்வார்கள் என்று கருதப்படுகிறது.
அடுத்த தலைவராக வரக்கூடிய வாய்ப்புள்ளவர்கள் என்ற ரகசிய பட்டியல் ஒன்று இருப்பதாக வதந்திகள் இருந்தாலும், அதில் உள்ள பெயர்கள் குறித்து தெரிந்ததாக இதுவரை தனிப்பட்ட நபரோ அல்லது எந்த செய்தியோ இதுவரை வெளிவரவில்லை.
இருப்பினும், அலி காமனெயியின் விருப்பமான வேட்பாளராக அவரது மகன் மொஜ்தாபாவோ அல்லது நீதித்துறைத் தலைவர் இப்ராஹிம் ரைசியோ இருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரைசி முன்னதாக இரானின் நீதித்துறை தலைவராக இருந்த சாடெக் லரிஜானி மற்றும் தற்போதைய அதிபர் ஹஸ்ஸன் ரூஹானி ஆகியோரும் அடுத்த அதிஉயர் தலைவராக வேண்டும் என்று விருப்பம் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
தற்போதைய அதிஉயர் தலைவரின் 51 வயது மகன் ஒரு நிழல் பாத்திரமாக விளங்குகிறார். அவர் மத ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நகரமான மஷாத்தில் பிறந்தார். மேலும், அவரது தந்தையைப் போலவே ஒரு மதகுருவும் ஆவார்.
2009இல் சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டங்கள் மீதான வன்முறைத் தாக்குதலின் போது மொஜ்தாபா பரவலான கவனத்தை ஈர்த்தார். அவர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு பொறுப்பானவர் என்று நம்பப்பட்டது.
எளிதாக தனது மகனை அரியணையில் அமர வைக்க அலி காமனெயி ஒரு மன்னர் அல்ல என்றாலும், மொஜ்தாபா தனது தந்தையின் வட்டத்திற்குள் குறிப்பிடத்தக்க அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.
இவர் ஈரானின் புரட்சிகர காவல்படையின் ஆதரவை பெறும் பட்சத்தில், அதிஉயர் தலைவரை தேர்ந்தெடுக்கும் செயல்முறையில் இவர் ஆதிக்கம் செலுத்தக்கூடும்.
இப்ராஹிம் ரைசி யார்?
60 வயதான மதகுருவான இவரும் மஷாத் நகரத்தில் பிறந்தவராவார்.
ஈரானின் அடுத்த அதிஉயர் தலைவராக இவர் வரக்கூடும் என்று நம்பப்படுகிறது.
அடுத்த அதிஉயர் தலைவர் ஆவதற்கான அவரது விருப்பம் பற்றிய வதந்திகளை அவர் ஒருபோதும் மறுக்கவில்லை. மேலும் அவரது பல நகர்வுகள் அவர் இந்த பதவிக்கு வருவார் என்பதை குறிக்கும் வகையிலேயே இருக்கின்றன.
ஈரானின் நீதித்துறையில் பல பதவிகளை வகித்துள்ள இவர், நிபுணர்களின் சட்டமன்றத்தின் துணைத் தலைவராக உள்ளார்.
ரைசியின் கடந்தகால செயல்பாடுகள், குறிப்பாக 1988இல் அரசியல் கைதிகளுக்கு ஒரே சமயத்தில் மரண தண்டனை நிறைவேற்றியதில் உள்ள இவரது பங்கு, பலரது ஆதரவை இவர் பெறுவதில் பிரச்னையாக இருக்கக்கூடும். ஆனால், 2017இல் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், அதிஉயர் தலைவர் ரைசியை நீதித்துறைத் தலைவராக நியமித்தார்.
அந்த பதவியை ஏற்றது முதல் ஊடகங்களில் தனது செல்வாக்கை அதிகரித்த ரைசி, அடுத்த அதிஉயர் தலைவரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் புரட்சிகர காவல்படையுடன் வலிமையான உறவை கொண்டுள்ளார்.