மக்கள் அனைவரும் பண்டிகைகளை தமது குடும்பத்தாருடன் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இம்மாதம் பண்டிகை காலம் என்ற போதிலும் கொரோனா அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு பண்டிகைக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய செல்லும் போதும், கொண்டாட்டங்களை ஒழுங்கு செய்யும் போதும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். எனினும் வைரஸ் பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படாததால் பொதுமக்கள் அனைவரும் அவரவர் இல்லங்களிலேயே சுகாதார விதிகளை கடைப்பிடித்து பண்டிகைகளை கொண்டாடுவது பாதுகாப்பானது.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கமைய இதுவரையில் 1,289 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.