இளம் ஊடகவியலாளரை தூக்கிலிட்டது ஈரான்

இளம் ஊடகவியலாளரை தூக்கிலிட்டது ஈரான்

ஈரான்அரசுக்கு எதிரான இளம் ஊடகவியலாளர் ஒருவர் தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரான் தலைநகர் டெஹ்ரானில் நடக்க இருந்த இணையவழி வர்த்தக சம்மேளனம் ஒன்றிலிருந்து நான்கு ஐரோப்பிய நாடுகள் விலகியுள்ளன.

ரூஹுல்லா ஜாம் எனும் செய்தியாளர் செய்திகள் அனுப்பும் செயலி மூலம் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருந்தார்.

அவர் சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டார். ஜாமின் மரணம் ஐரோப்பிய நாடுகள் மற்றும் இரான் இடையே வெளியுறவு விவகாரம் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

ரூஹுல்லா தூக்கிலிடப்பட்ட பின்பு இந்த இணையவழி சம்மேளனத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிவித்துள்ளன.

இந்த சம்மேளனம் இன்று திங்கள் கிழமை தொடங்கி புதன்கிழமை வரை நடைபெறுவதாக இருந்தது. இப்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அதன் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

2017ஆம் ஆண்டு இரானில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களை இணையதளத்தில் ஆவணப்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளானார் ரூஹுல்லா.

அவருக்கு அப்போது பிரான்ஸ் அரசு தஞ்சம் அளிக்க ஒப்புதல் தந்தது. ஆனால் இராக்கில் கைது செய்யப்பட்ட அவர் இரான் கொண்டு செல்லப்பட்டார்.

பத்திரிகையாளர்கள் தூக்கிலிடப்பட்டதை காட்டுமிராண்டித்தனம் என்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

இரான் நிறைவேற்றவேண்டிய சர்வதேச கடமைகளுக்கு எதிரானதாக இந்த செயல் அமைந்துள்ளது என்றும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியமும் தூக்கிலிடப்பட்டதை வன்மையாக கண்டித்துள்ளது.

தன் மீதான விமர்சனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இரான், பிரான்ஸ் மற்றும் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சி அடிப்படையிலான தலைமை பொறுப்பை வகிக்கும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் தூதர்களை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது.

சீர்திருத்தவாத இஸ்லாமிய மதகுருவான முகமது அலி ஜாமின் மகனான ரூஹுல்லா ஜாம், அமாத் நியூஸ் எனும் பெயரில், அரசுக்கு எதிரான செய்தி இணையதளம் ஒன்றை நடத்திவந்தார்.

2017, 2018 ஆண்டுகளில் அரசுக்கு எதிரான போராட்டத்தை இந்த இணையதளம் மூலம் அவர் தூண்டி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த இணையதளத்தை பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின்தொடர்ந்தனர்.

டெலகிராம் செய்தி இணையதளம் மூலம் அப்போதைய போராட்டங்களின் காணொளிகள் மற்றும் இரான் அரசு அதிகாரிகளுக்கு எதிரான தகவல்களை அமாத் நியூஸ் பகிர்ந்து வந்தது.

ஆபத்தான உள்ளடக்கங்களை பகிர்வது தொடர்பான தங்களது நிறுவனத்தின் கொள்கை விதிகளை மீறும் வகையில் அமாத் நியூஸ் இருப்பதாகக் கூறி அதன் கணக்கை டெலகிராம் நிறுவனம் நீக்கியது.

ஆனால் அமாத் நியூஸ் நிறுவனத்தின் கணக்கு வேறு ஒரு பெயரில் மீண்டும் டெலகிராமில் தொடங்கப்பட்டது.

கட்டாயப்படுத்தப்பட்டு வாங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நியாயமற்ற விசாரணைக்கு இரை ஆனவர் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *