இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சாவும் இராணுவத் தளபதி சர்வேந்திர சில்வாவும் காணாமற்போன நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் குறித்து சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டத்தின் படி பொறுப்பு கூற வேண்டியவர்கள் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் (ITJP) மற்றும் JDS அறிவித்துள்ளது.
மேற் குறிப்பிட்ட இரு அமைப்புக்களும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“காணாமற்போனவர்கள் பற்றிய அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி இறுதிக் கட்டப் போரில் 330 தமிழர்களும் 1989 இன் இறுதிக் காலாண்டுப் பகுதியில் 154 சிங்களவர்கள் காணாமற் போயுள்ளனர்.
இருப்பினும் காணாமற்போனவர்கள் பற்றிய அலுவலகத்தின் அறிக்கையில் பெரியளவில் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது, எங்கு இருக்கின்றார்கள் என்ற உண்மையைக் கண்டறிவதற்கான உரிமை குடும்பங்களுக்கு உண்டு.
அத்துடன் வலிந்து காணாமற் போதல் என்பது ஒரு குற்றம் என்பதனால் இறுதிப் போரில் கட்டளைப் பொறுப்பில் இருந்த இராணுவ அதிகாரிகளும் யாருடைய பொறுப்பில் கீழ் அவர்கள் சரணடைந்தார்களோ அந்த அதிகாரிகள் சரணடைந்த நூற்றுக்கணக்கான தமிழர்களை எவ்வாறு தொலைந்து போக விட்டார்கள் என்பதைப் பற்றி விளக்கம் தருவதற்கான சட்ட ரீதியான கடப்பாடு உண்டு“ என்றுள்ளது.
மேலும், 1989 இல் ஜனாதிபதி பொறுப்பாக இருந்தபோது மாத்தளையில் இருந்து பல சிங்கள இளைஞர்கள் ஏன் காணாமற்போனார்கள் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை மக்களுக்கு விளக்கமளிக்கப் போகின்றாரா? என ITJP அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்தோடு அரசாங்கத்தின் இந்தக் காணாமற்போனவர்களின் பட்டியல்கள் இலங்கையின் இராணுவத் தளபதிக்கு எதிராக வழக்கு தொடர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை பதவியில் இருந்து வெளியேறிச் சென்ற பின்னர், ஒரு நாள் ஜனாதிபதிக்கு எதிராகவும் வழக்கு தொடரமுடியும் என்பதையும் காணாமற்போனவர்களின் பட்டியல்கள் காட்டுகின்றன என்றும் ஜஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.