கேரளா உள்ளாட்சித் தேர்தலில் 2132 இடங்களில் வெற்றிபெற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகோன்னத வெற்றியீட்டியுள்ளமை அடுத்து வரும் தமிழக சட்டமன்ற தேர்தலிலும் கூட சிறப்பாகப் பிரதிபலிக்கும் என எதிர்பார்ப்பதாக அக் கட்சியின் தேசியத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பெருவெற்றி குறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் கேரளத்தில், பேராசிரியர் காதர் மொகிதீனின் களங்கமற்ற, செயல்திறன் மிக்க தலைமைத்துவத்தின் வழிகாட்டலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிகளை குவித்திருப்பதையிட்டு இலங்கை முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையைப்பெற்றுள்ள அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையில் அக மகிழ்கின்றேன்.
கேரளாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கிராமப் பஞ்சாயத்துகளிலும், வட்டாரப் பஞ்சாயத்துகளிலும், மாவட்டப் பஞ்சாயத்துகளிலும், நகராட்சிகளிலும், மாநகராட்சிகளிலுமாக மொத்தம் 2132 இடங்களை வெற்றி கொண்டுள்ளது ஒரு பலமான செய்தியைச் சொல்கிறது.
கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர், காசர்கோடு போன்ற பல பகுதிகளிலும் தங்களது கட்சியின் செல்வாக்கு பெரிதும் அதிகரித்திருப்பதை இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் உணர்த்தி நிற்கின்றன.
பேராசிரியர் காதர் மொகிதீனின் அகில இந்திய தலைமைத்துவத்தின் கீழ் கேரளத்தில் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி எம்.பி, சைய்யத் ஹைதர் அலி ஷிஹாப் (தங்கள்) போன்ற அரசியல் முக்கியஸ்தர்கள் சிலரின் நெறிப்படுத்தலில் இந்த சிறப்பான வெற்றி எட்டப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
கேரளா உள்ளாட்சியில் பல தலைமைப் பொறுப்புக்களை வகிக்கும் வாய்ப்பும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு கிட்டியிருப்பது இரட்டிப்பான மகிழ்ச்சியைத் தருகின்றது.
நீங்கள் எல்லோருமே எங்களோடு நட்புறவோடு பழகுபவர்கள். ஏனைய தமிழக அரசியல் பிரமுகர்களோடு சேர்ந்து இலங்கைக்கு வந்து எனது புதல்வியின் திருமணத்திலும் கலந்து சிறப்பித்தவர்கள் என்பதையும் இந்த மகிழ்ச்சிகரமான சந்தர்பத்தில் நன்றியறிதலோடு நினைவு கூர்கின்றேன்.”
இவ்வாறு அந்தச் செய்தியில் காணப்படுகின்றது.