இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் காலக்கெடு விதிப்பதால் தற்போதைய நிலை மாறும் என்று எவ்வாறு முடிவுக்கு வந்துள்ளீர்கள்? என்று நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பில் சுமந்திரனுக்கு விக்னேஸ்வரன் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அன்புள்ள சுமந்திரன் அறிவது,
எனது பார்வைக்காக என்னிடம் கையளித்த ஆவணத்திற்கு நன்றி. அது ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அங்கத்தவர்களுக்குமான கடிதத்தின் முதல் வரைவாகும்.அதன் முதல் ஐந்து பக்கங்களிலும் நீங்கள் குறிப்பிட்டிருப்பவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினர் முற்றிலும் அறிந்த விடயங்களே. அம்முதல் வரைவின் முன்னுரையில் நீங்கள் இருசாராரும் இயற்றிய மனித உரிமை மீறல்கள் பற்றிக் கூறியுள்ளீர்கள். நாங்கள் இவ்விடயத்தில் புறநிலை கூர் நோக்கர்களாக இருக்க வேண்டுமா அல்லது சுயநிலை முறைப்பாட்டாளர்களாக மாறவேண்டுமா என்பதில் எனக்கு மயக்கம் இருக்கின்றது.
எது எவ்வாறு இருப்பினும் உங்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒரேயொரு திடமான செயற்பாடானது இதுவரை காலமும் தோல்வியைத் தழுவிய கூட்டத் தீர்மானம் போன்ற பிறிதொரு கூட்டத் தீர்மானத்தை மீண்டும் கொண்டு வருவதாகும். அதுவும் இலங்கை அரசாங்கம் ஒற்றுமைக் கூட்டத் தீர்மானமாக முன்னர் கொண்டுவந்த தீர்மானத்தில் இருந்து பின்வாங்கிய பின்னர் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளீர்கள்.மீண்டும் காலக்கெடு விதிப்பதால் தற்போதைய நிலை மாறும் என்று எவ்வாறு முடிவுக்கு வந்துள்ளீர்கள்? உண்மையில் மேலும் காலக்கேடு அளித்தால் இன்றைய அரசாங்கமானது தமிழ், முஸ்லீம் சமூகங்களை இனி இல்லை என்று ஆக்கி விடுவார்கள் என்பதை உணர்ந்தீர்களா? அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. நீங்கள் உங்கள் முதல் வரைவில் மிகச் சரியாகப் பின்வருமாறு கூறியுள்ளீர்கள் –
“தற்போது அவர்கள் குடியியல் பதவிகளுக்கு படையினரைத் தொடர்ந்து நியமித்து வருகின்றார்கள், தமிழ் மக்களின் காணிகளைக் கைப்பற்றி வருகின்றார்கள், தொல்லியல் மேலாண்மை என்ற பெயரில் கிழக்கிலங்கையில் காணிப் பங்கீட்டை நடாத்த பௌத்த மதவாளர்களை நியமித்துள்ளார்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோரைக் கண்காணிக்கவும் பயமுறுத்தவும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார்கள். மேலும் முஸ்லீம் சமூகத்தவரின் மதம் சார்ந்த நல்லடக்கச் சடங்குகளைத் தடைபோட்டுத் தடுத்து வருகின்றார்கள்.
அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் மிக்க செல்வாக்குள்ள அங்கத்தவராக மாறிவரும் சீனாவானது 2020ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 9ந் திகதியன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அடங்கிய உலக ஸ்தாபனங்களில் இலங்கைக்கு முழு ஆதரவை வழங்கியும் பாதுகாப்பையும் வழங்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது”
இவ்வாறெல்லாம் நடக்கின்றன என்று கூறும் நீங்கள் எதற்காக இலங்கைக்கு மேலும் காலக்கெடு அளிக்க முன்வந்துள்ளீர்கள்?நீங்களே உங்கள் பரிந்துரையொன்றில் காலக்கெடு அளிப்பதால் ஆவதொன்றில்லை என்ற கருத்தைப் பின்வருமாறு வெளியிட்டுள்ளீர்கள்.
“தாமதமானது மேலும் நீடித்தால் சிங்கள பௌத்தர்களின் ஆதிக்கமானது மேலும் வலுவடைந்து இலங்கையின் சிறுபான்மையினர் அனைவரையும் கீழடக்கும் காலம் விரைவில் வரவிருக்கின்றது என்ற பாதிக்கப்பட்ட சமூகத்தினரின் சட்ட ரீதியான ஏக்கத்தைக் கவனத்தில் எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளீர்கள்.இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டும் மேலும் காலக்கேடு இலங்கைக்கு வழங்க நீங்கள் முன்வருவது எனக்கு மலைப்பை ஏற்படுத்துகின்றது.
உங்கள் பரிந்துரையானது இனவழிப்பு செய்த ஒரு அரசாங்கத்திற்கு முன்னர் அளித்த சலுகைகளை சர்வதேச நாடுகள் மீண்டும் அளிக்க வேண்டும் என்ற தொனிப்படவே அமைந்துள்ளது. அதில் மனவருத்தத்திற்குரியது என்னவென்றால் இந்தக் கோரிக்கையை பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் நீங்கள் முன்வைக்க முன்வந்துள்ளீர்கள். உங்கள் ஆவணத்தையும் பரிந்துரைகளையும் எவ்வாறு நாம் ஏற்க முடியும்? அவ்வாவணத்தை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
ஐங்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தில் இருந்து தள்ளி நின்று அதற்கு எமது பகைமையை வெளிக்காட்டுவது சரியானதா என்ற கேள்வி உங்கள் மனதில் பூதாகாரமாக எழுந்துள்ளதை நான் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஆனால் ஐக்கிய நாடுகள் குற்றவியல் நீதிமன்றத்திற்கோ ஐக்கிய நாடுகள் நீதி மன்றத்திற்கோ இலங்கையைக் கொண்டு செல்ல தமிழர் தரப்பார் இதுவரையில் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டுத் தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என்றோ பேரவையைப் பகிஸ்கரியுங்கள் என்றோ நான் கூறவில்லை. நான் கூறுவது என்னவென்றால் பேரவையின் கூட்டுத்தீர்மானத்தை மேலும் பலப்படுத்த மேல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதேயாகும்.
வடக்கு மாகாணசபையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்ந்த உள்ளுராட்சி மன்றங்கள் சிலவும் ஏற்கனவே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த வேண்டும் என்று ஒருமனதாக கூட்டுத்தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. அத்துடன் TELO, EPRLF, TULF, PLOTE மேலும் ஈழத்தமிழ்ச் சுயாட்சிக் கழகம் ஆகியவற்றுடன் எனது கட்சியும் சேர்ந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரிடம் சென்ற வருடமே மார்ச் மாதத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தக் கோரியுள்ளோம்.
ஆகவே இன்றைய நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினரிடமோ ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையினரிடமோ இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ ஐக்கிய நாடுகளினால் விசேடமாக நியமிக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பு ஆயத்திற்கோ பாரப்படுத்துமாறு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் நாம் கேட்கலாம்.
அதே நேரத்தில் சமாந்திரமாக நாம் இலங்கையை சர்வதேச நீதி மன்றின் முன் கூட்டிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை முன்பான பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நடைமுறைச் சாத்தியமான செயற்பாடாகும். இவற்றைச் செய்ய முடியுமா முடியாதா என்று மயங்கி நிற்கக் கூடாது. எமது மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் இவற்றைச் செய்வது எமது கடமையும் கடப்பாடாகவும் அமைகின்றது.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் கோரிக்கை விடும் அதே நேரம் ஐக்கிய நாடுகள் விசேட ஆய்வாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் அந்தப் பேரவையிடம் கோரிக்கை விடலாம்.
அதாவது இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், காணி அபகரிப்பு போன்றவற்றைக் கண்காணிக்கவும் ஆராயவும் இவ்வாறான ஒரு ஆய்வாளரை நியமிக்கக் கோரலாம். அத்துடன் ஒரு சுயாதீனமான விசாரணைப் பொறிமுறையொன்றையும் தாபித்து பொறுப்புக் கூறலையும் போர்க்குற்ற செயல்பாடுகளையும் ஆராயுமாறு கோரலாம்.
இவற்றை முழுமனதுடன் நடைமுறைப்படுத்த நீங்கள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன். இந்த அடிப்படையில் ஒரு கடிதத்தை வரைந்து தமிழ்க் கட்சிகள் எல்லோரும் சேர்ந்து கையெழுத்திட்டு அதனைப் பாரப்படுத்தலாம். நீங்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் இவற்றைச் செய்ய ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
நாம் ஒன்று சேர்ந்து இந்த நடவடிக்கைகளை எடுப்போமாக! எனது கட்சி இதற்காக உங்களுக்கு முழு ஆதரவையும் நல்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நன்றி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.