கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை துரிதப்படுத்துவதுடன், தமக்கான உடனடி உடல் நல மேம்பாட்டுக்கும் உதவி புரியுமாறு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிறைச்சாலைகளில், கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக சுகாதார அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் அவர்கள் இந்த அவசர கோரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகளும் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் ஜி மற்றும் எச் (G,H) விடுதிகளில் 48 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளோம்.
கொழும்பு நகரப் பகுதிகளிலும் சிறைச்சாலைகளிலும் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றுக் காரணமாக நாம் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதிகளிலேயே எமக்கான சுயதனிமைப்படுத்தலைக் கடைப்பிடித்து வந்தோம்.
எனினும், கடந்த இரண்டு வாரங்களாக அனைத்து அரசியல் கைதிகளுக்கும் கடும் காய்ச்சலுடன் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.
நேற்றைய தினம் எமது விடுதிகளைச் சேர்ந்த சிலருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
ஆகவே, மகசின் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலையில் பொதுச் சுகாதாரப் பிரிவு கவனப்படுத்தியுள்ளது.
போதிய தொற்று நீக்கல் செயற்திட்டம் மற்றும் ஊட்டச்சத்தான உணவு பராமரிப்பு இன்மைகளுக்கு மத்தியில் நாம் தொடர்ந்து விடுதிகளிலேயே சுயதனிமைப்படுத்தல் முறையினை மேற்கொண்டு வருகின்றோம்.
நீண்டகாலம் சிறைத் தடுப்பிலுள்ள எம்மவர்களுள் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் வயதானவர்களும் இருப்பதனால் அரசியல் கைதிகள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது என்பதனைத் தெரியப்படுத்துகின்றோம்.
இவ்வேளையில், அரசியல் கைதிகளான எமது விடுதலையை துரிதப்படுத்துவதுடன், எமது உடனடி உடல் நல மேம்பாட்டுக்கும் உதவி புரியுமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கோரி நிற்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.