நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்க கூடாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின் அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஜெனிவாக் கூட்டத்தொடரில் தமிழர் தரப்பில் எடுக்க வேண்டிய தீர்மானங்கள் சம்பந்தமாக ஆலோசனை பெறுவதற்காக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நான்கு கட்சிகள் அடங்கிய கூட்டம் ஒன்று கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
அந்தக் கூட்டத்தில் மூன்று விடயங்களை முக்கியமாக ஆராய்ந்து இருந்தோம். ஜெனிவா கூட்டத்தொடரில் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்கு முன்னர் அரசியல் தீர்வு யோசனை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வடக்கு கிழக்கு மாகாணங்களில் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற விடயங்களை ஆராய்ந்திருந்தோம்.
இதில் குறிப்பாக ஜெனிவா கூட்டத்தொடர் சம்பந்தமாக தமிழர் தரப்பிலிருந்து 3 தமிழ் தேசிய பிரதான அணிகளும் சேர்ந்து அதனுடைய 13 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கி ஒரு யோசனை சமர்ப்பித்தால் அதே யோசனையை இங்கு இருக்கக்கூடிய சிவில் அமைப்புக்கள் மதப் பெரியார்கள் அதேபோல பல்கலைக்கழக மாணவர்கள் போன்ற பல்வேறு அமைப்புகளும் புலம்பெயர் அமைப்புகளும் ஏற்றுகொண்டால் அது ஒரு சிறந்த நிலைப்பாடாக இருக்கும் என்ற கருத்திலே நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்திருக்கின்றோம்.
அதிலே குறிப்பாக கருத்தொற்றுமை வருகின்றபோது கால நீடிப்பை மறைமுகமாகவோ நேரடியாகவோ வலியுறுத்துவதாக அமையக்கூடாது என்ற விடயத்தில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். இனிமேல் எக்காரணம் கொண்டு நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வந்திருக்கின்றது.
நாங்கள் ஒரு யோசனை தயாரித்திருக்கின்றோம். இந்த யோசனை 3 தமிழ் தேசிய கட்சிகளிடமும் பிரஸ்தாபித்து எங்களுடைய கட்சியை தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் சமர்ப்பித்து எல்லோரும் இணைந்து ஒரு முடிவு எடுக்க கூடியவாறாக தீர்மானித்திருக்கிறோம்.
அதாவது முக்கியமாக இரண்டு கோரிக்கைகளை நாங்கள் வைத்திருக்கின்றோம். அதேபோல தமிழ்தேசிய மக்கள் முன்னணி, கூட்டமைப்பு ஏதாவது யோசனைகள் முன்வைப்பார்களாக இருந்தால் அதற்கு ஏற்றவாறு முடிவுகளை மாற்றலாம் ஆனால் எந்த விதத்திலும் எந்த காரணத்தைக் கொண்டும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பை வழங்குவதில்லை என்ற கோரிக்கையின் அடிப்படையில் கோரிக்கையை முன்வைக்க இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.