புதிய அரசியலமைப்பானது அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்படுவதுடன், வரலாற்று ரீதியான தவறுகள் இம்முறை திருத்திக் கொள்ளப்படும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உறுதியளித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு அனைத்து இன மக்களின் அபிலாசைகளும் அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்பட வேண்டும்.
தேசிய பாதுகாப்பு, மற்றும் இறையாண்மை ஆகிய அடிப்படை காரணிகள் அரசியலமைப்பில் முக்கியமானவை. இவற்றில் தனிப்பட்ட மக்களின் காரணிகள் செல்வாக்கு செலுத்தாது. இலங்கையின் அரசியலமைப்பு ஒற்றையாட்சி தன்மைக்குட்பட்டது.
ஆனால் ஒரு தரப்பினர் சமஷ்டியாட்சி அடிப்படையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். அது அவர்களின் தனிப்பட்ட மற்றும் கட்சி நிலைப்பாடாகும்.
இலங்கையின் அரசியலமைப்பு சமஷ்டியாட்சி தன்மையில் உருவாக்க முடியாது என்பதற்கு அரசியல் மற்றும் பௌதீக காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. ஆகவே சமஷ்டியாட்சி அரசியலமைப்பு என்பது சாத்தியமற்றது.
புதிய அரசியலமைப்பினை உருவாக்குவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
புதிய அரசியலமைப்பில் அனைத்து இன மக்களின் அபிலாசைகளும் உள்வாங்கப்படும். இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் ஒரு சில ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் காணப்படுகின்றன.
வரலாற்று ரீதியான இவ்வாறான தவறுகள் இம்முறை திருத்திக் கொள்ளப்படும். புதிய அரசியலமைப்பை அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்றார்.