நான் பிறந்த
சின்ன ஆஸ்பத்திரி
காவிநிற சுவரும்
அதை கடக்கும்
போது வரும்
மருந்து வாடையும்
என்னெண்டு
சொல்ல
சோம்பேறி மடத்து
பூவரசு மர
நிழலும்
பகலில் கேட்டும்
இரவில்
கேளாமல் பிடுங்கும்
சொபியா வீட்டு
விளாட் மாங்காயும்
மார்கழி மாதம்
மட்டும்
தூரத்தில் மெல்லிதாய்
கேட்க்கும்
சுப்ரபாதமும்
நாட்காட்டியில்
திகதி
கிழிக்கச் சொல்லும்
பெரிய கோவில்
திருந்தாதி மணி சத்தமும்
வாசிகசாலை
விகடன்
புத்தகத்தை
சொக்கலிங்கம் விதான
மகளுக்கு
கொடுத்து கலர்மீன்
வாங்கியது என்று
நீண்டு கொண்டே
போகும் ஒரு
பெரிய பட்டியல்
மறைந்திருக்கும்
மூளையின்
ஒரு ஓரமாக
ஒளித்திருந்து
முழுசிக்கொண்டிருக்கும்
நினைவுகளை
எட்டிப்பார்க்க முதல்
ஓடிவந்து
வரிசையில் நிப்பதை
குறிப்பெடுக்கும்
போதுதான்
தெரிகிறது
வேணாமெண்டு
ஒதுக்கியது
தேவையென்றும்
நல்லதெண்டு
தேடியவை
பழுது போலும்
எல்லாமே தலைகீழாக
இடம்மாறி
தெரிவதாய் அடித்து
சொல்லுது
மனது
என்னத்த சொன்னாலும்
இந்த
நினைவெல்லாம்
தந்த எனதூரை
எப்படி மறக்க முடியும் ……?
யாழ் சுதா / 12/2020