மேஜர் செங்கோல்

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற தனது பெயரைக் காப்பாற்றிய ஒரு காவியம் இன்று எங்களுடன் இல்லை.

மணலாற்றில் களவரலாற்றில் இவனது நிதிப்பணியை நினைத்துப் பார்க்கிறேன்…. நிதிப்பொறுப்பாளனாய், தோளில் பணப்பையைத் தொங்கவிட்டபடி ஓடி ஓடிக் கடமையைச் சரிவரச் செய்த நாட்கள் தான் எத்தனை.? நிதி இருக்குமிடத்தில் நீதியிருப்பதில்லை. நீதியிருக்குமிடத்தில் நிதியிருப்பதில்லை. ஆனால் செங்கோலிடம் நிதியும், நீதியும் இணைந்திருந்தன.

செங்கோலுக்கு என்றும் கண்கள் இரத்தம் போல் சிவந்திருக்கும். அவன் கண்கள் ஏன் சிவந்து கிடந்தன என்பதை இப்போதுதான் சிந்தித்துப் பார்க்கிறேன். தூங்குவதற்கு இவனுக்கு நேரம் கிடைத்ததில்லை. நாம் படுக்கும் போது விளக்கும் கணக்குமாய் இருப்பதைப் பார்க்கிறோம். விழிக்கும் போதும் அதே மேசையில்…. அதே இருக்கையில்…. அவன் எப்போது தூங்குகின்றானென்பதை இறுதிவரை என்னால் கண்டுபிடிக்க முடிந்ததில்லை.

‘கப்டன் சங்கிலி’ ஓயாமல் வாகனமோட்டித் தியாகியாகிப் போனவனின் பெயர் தாங்கிய லொறிவண்டி. செங்கோலைத் தவிர மற்றவர்கள் அதனை ஓட்டுவது கடினமானது. சிங்கள அரசின் பொருளாதாரத் தடையை உணர்ந்து எங்கள் போராட்டத்தை வளர்க்கவேண்டுமென ஓடிய லொறிவண்டி அது. மணலாற்றுச் சண்டைக் களங்களுக்கெல்லாம் அந்த லொறி வண்டியில் தான் பொருள்களை ஏற்றி இறக்குவான் செங்கோல். பணத்தை அளவோடு செலவிட வேண்டுமென்பதற்காக, தானே சென்று கொள்வனவு செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். இயக்கத்தின் வளர்ச்சியை நெருக்கடியான காலத்தில் எவ்வாறு எடுத்துச் செல்ல N
வண்டுமென்பதைச் சரியாகப் புரிந்து நிதிப்பணி புரிந்தான். சில நாட்களாக ஓடுவாரற்று நிற்கும் ‘கப்படன் சங்கிலி’ லொறிவண்டியைப் பார்க்கும் போது நெஞ்சில் வேதனை முட்டிக் கொள்கிறது.

மணலாற்றில் நடக்கும் ஒவ்வொரு சண்டையிலும் களைப்புடன், பசியுடன் இருக்கும் எம் வீரர்கள், ‘செங்கோலண்ணனுடைய இடத்திற்குப் போய் வருவம் மச்சான்’ என்று கூறிக்கொண்டு ஓடிவருவார்கள். செங்கோல் ஏதாவது நல்ல சாப்பாட்டுப் பொருள்களைக் குறைவின்றி வாங்கி வைத்திருப்பான். வயிராற, ஆசைதீரத் தன் தோழர்கள் சாப்பிடும்போது தனக்குள் மகிழ்வையும், நிறைவினையும் கண்டு கொண்டான். இன்றோ, நாளையோ மண்ணுக்காய் உதிரப்போகும் அவர்களை மகிழ வைப்பதையே தன் மகிழ்வாகக் கருதியவன், கண்மூடிக் கிடந்த போது அவன் முன்னே பேசுவதற்கு வார்த்தைகளின்றித் தலை குனிந்து நின்ற வீரர்களை நினைத்துப் பார்க்கும்போது….

செங்கோல் மக்களுடன் கொண்டிருந்த உறவு வித்தியாசமானது. அவன் யாருடைய வீட்டிற்கும் சென்றது கிடையாது. அப்படிச் செல்வதை அவன் விரும்பியதில்லை. விரும்பினாலு; நேரம் கிடைப்பதில்லை. ஆனால் செங்கோலைத் தெரியாதவர்களில்லை. அவன் மீது பற்றும் பாசமும் வைக்காதவர்களில்லை. மக்கள் மனம் நோகாமல் பேசிக் காரியத்தைக் சாதுரியமாக முடித்துக்கொள்வான். செங்கோலின் வீர உடல் கல்லறைக்குச் செல்லும் போது மக்கள் வாய்விட்டு அழுதபோது நான் வியப்படைந்தேன். மரணத்தில்தான், மக்கள் அவன் மீது கொண்ட ஆழமான நேசத்தை அறியமுடிந்தது.

செங்கோல் புரிந்துணர்வுள்ள போராளி, அன்று ஊரியான் பாதையில் சேற்றில் கால் புதைய, சாரத்தை உயர்த்திச் சண்டிக்கட்டுக் கட்டிக் கொண்டு முக்கியமான பொருள்களைச் சுமந்து, சுமந்தே கரை சேர்த்ததை நினைத்துப் பார்க்கிறேன்… சாவிற்கு முன் இவன் கிளாலிப் பாதையில் அனுபவித்த துன்பங்கள்….

கொடுத்த வேலை எதுவாக இருந்தாலும் சொல்லிலோ, செயலிலோ தளர்வு காட்டாதவன். அன்பான ஆனால் அனவான பேச்சு. அளவிற்கு மிஞ்சினால் கோபத்தில் கண்கள் சிவந்து விடும். உயர்ந்த தோற்றமும், சிவந்த கண்களும், அளவான அமைதியான பேச்சும் இவன் மீது மற்றவர்களுக்கு அச்சத்தை உண்டாக்கும். பழகி உள்ளம் புரிந்தோர்க்கு மரியாதையும், அன்பும் கொண்ட இவனின் தந்தை கூட ஒரு விசித்திரமான பிறவி.

1988 இல் தமிழீழ விடுதலைப்போருக்குக் கொள்ளி செருக முற்பட்ட தேசவிரோதக் கும்பல்கள், செங்கோலின் அண்ணனை பளையில் வைத்துக் கண்டதுண்டாக வெட்டிக் கொன்றனர். மகனை வெட்டிக் கொன்ற செயல் பொன்னுத்துரையின் இருதயத்தை வெடிக்கச்செய்தது. அந்த நாள்தான் செங்கோலின் விடுதலை வாழ்வுக்கு வழியமைக்கிறது. பொன்னுத்துறை தன் மகனைத் தானே களத்துக்கு அனுப்பிவைக்கின்றார்.

மணலாற்றுக் காட்டில் பயிற்சி முடித்த செங்கோலின் திறமை அளவிடப்பட்டது. அதனால் பயிற்சி ஆசிரியனாக நியமிக்கப்பட்டான். தொடர்ச்சியாக மூன்று பயிற்சிப்பாசறைகளை நிறைவாக முடித்தான். கடமை வீரனாய் நின்ற செங்கோல், பொறுப்பாளர்களின் கருத்தில் நிறைந்தான். அதன் விளைவு அவனின் வளர்ச்சிப் படியானது. நிதிப்பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. சிக்கலும், பொறுப்பும்மிக்க இந்தப் பணியில் செங்கோலின் கோல் தளம்பலின்றி நின்றது.
செங்கோலின் நிதானமான வளர்ச்சி முல்லைத்தீவுக் கோட்டத்தின் சிறப்புப் பொறுப்பாளனாக அவனை உயர்த்தியது. பொறுப்பேற்று இரண்டு வாரம் இருக்கும், எங்காவது பெருமளவு இராணுவத்தை கொல்ல வேண்டும், ஆயுதங்களை அள்ள வேண்டும் என்ற உணர்வு தலையெடுத்து நின்றது. சாதனை மிக்க வரலாறு எழுதப்படுவதற்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த நாளின் அவன் தந்தையின் உணர்வுகளை அசைபோட்டுப் பார்க்கின்றேன்.

செங்கோலின் பிறந்த மண் இயக்கச்சிக் கிராமம். இன்று சிங்களப்படைகளின் ஆக்கிரமிப்புக்குள்குள் விழுங்கப்பட்டுக் கிடக்கின்றது. பளையினை அண்டிய பகுதியில் அவனது தாய் தந்தையர் வாழ்கின்றனர். அண்மையில் யாழ்ப்பாணம் சென்றுவந்த போது அவனது தந்தையைக் கண்டு கதைத்தேன்.

‘செங்கோல் முன்பு போல இனி இங்கே வரமாட்டான், அவனுக்குப் பொறுப்பு அதிகரிச்சிருக்கு’ என்று கூறியபோது, ‘அவன் இஞ்சை வரவேண்டாம் தம்பி, அவன் விடுகிற பிழையளை வந்து நீங்கள் சொல்லுங்கோ. நான் வாறபோது அவனிடம் சொல்லி அவனைத் திருத்த உதவியாய் இருக்கும்’ என்று சொன்னார். மீண்டும் அவரிடம் செல்லும் முன்…. பிழைவிட்டால்தானே அவரிடம் சொல்ல வேண்டும். பிழையற்ற அவன் வீரத்தைச் சொல்ல விரைந்தபோது….

செங்கோலின் தாய் சாதாரணமானவளல்ல, தியாகத்தின் இருப்பிடம். செங்கோலின் வீரச்சாவை எப்படித் தெரிவிப்பது என்ற தயக்கத்தோடு வீட்டு வாசலுக்குள் நுழையும் போதே…. ‘தம்பி! என்ரை பிள்ளையின்ரை வீரத்தை நான் அறிந்துவிட்டேன். என்ர பிள்ளை இயக்கத்திற்குச் செய்ததைவிட என்ர பிள்ளைக்கு இயக்கம் அதிகமாய் செய்திட்டுது’ என்று கூறி நின்ற அவனது வீரத்தாயை நினைக்கிறேன்.

செங்கோல் தன் வீர அத்தியாயத்தின் முடிவுவரிகளை எழுதிக் கொண்ட நாளை நினைத்துப்பார்க்கின்றேன். தாக்குதலுக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டிருந்தன. நாடியில் கைஊன்றியபடி இருந்தான் செங்கோல். ‘என்ன மச்சான் யோசிக்கிறாய், உன்ர பெடியளுக்கு தாக்கும் முறைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிரு’ என்று சொல்லியபோது சிரித்தவாறே எழுந்து சென்றான். அன்றிரவு முழுவதும் செங்கோல் தூங்கவில்லை. நிலைகளைச் சரிபார்ப்பதும், புத்திமதிகள் கூறுவதுமாய் இருந்தான்.

1992ஆம் ஆண்டு மார்கழித் திங்கள் 24ம் நாள் சூரியனின் பகல் கொடுமை தணிந்து கொண்டிருந்தது. 4.30 மணியிருக்கும் இராணுவத்தினர் முகாமிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். இன்னும் சில நிமிடங்களில் செங்கோலின் அணி தாக்குதலை தொடங்கும் அபாய அமைதி. செங்கோலின் குரல் வோக்கிடோக்கியில் ஒலித்துக்கொண்டிருந்த செங்கோலின் குரல்?….. நின்று விட்டது. நாற்பதுக்கும் மேற்பட்ட இராணுவத்தைக் கொன்று ஆயுதங்களை அள்ளிய வீர இறுமாப்புடன் கண்மூடிக்கிடந்தான் செங்கோல். செங்கோல் சரிந்துவிட்டது….

செங்கோலுக்காய் எழுத என் பேனாவுக்கு வல்லமையில்லை. அது நின்று கொள்கிறது. மை முடிந்ததாலல்ல, மீண்டும் மீண்டும் என் சிந்தனை கனப்பதால்…. எழுத்துக்கள் நனைகின்றன. மழையல்ல, பொங்கிய கண்ணீரால்….

நினைவுப்பகிர்வு: பாண்டியன்.
நன்றி – களத்தில் இதழ் (19.03.1993).

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *