இந்திய வம்சாவழி இலங்கைத் தமிழர்கள், அந்தமான் – நிக்கோபாரில் எதிர் கொள்ளும் துன்பியல் வாழ்வு.

இந்திய வம்சாவழி இலங்கைத் தமிழர்கள், அந்தமான் – நிக்கோபாரில் எதிர் கொள்ளும் துன்பியல் வாழ்வு.

இந்திய வம்சாவழி இலங்கைத் தமிழர்கள், அந்தமான் – நிக்கோபாரில் எதிர் கொள்ளும் துன்பியல் வாழ்வு. இலங்கையின் மலையகப் பகுதிகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு, அந்தமான் மற்றும் நிக்கோபாரின், தொலை தூர கச்சல் தீவில் கட்டாயமாக குடியேற்றப்பட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் சமூகம், கடந்த ஐந்து தசாப்தங்களாக பாரிய இன்னல்களை எதிர்கொள்கின்றனர். முறையான மீள்குடியேற்றம் மற்றும் அடிப்படை வாழ்வாதார வசதிகளை கோரி, கடந்த ஒரு மாதமாக இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக கலாநிதி எஸ் வெங்கடநாராயணன் எழுதிய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.1964 ஆம் ஆண்டில் ஸ்ரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட சுமார் 5.25 லட்சம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள், கட்டாய இடம்பெயர்வுக்குப் பின்பும், கடந்த ஐந்து தசாப்தங்களாக இன்னும் நிலையான, இயல்பான வாழ்வை அமைத்துக்கொள்ளவில்லை.19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய காலநித்துவ ஆட்சியின் கீள் தென் இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்ட இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் பிரித்தானியரால் நிர்வகிக்கப்பட்ட பெருந்தோட்ட தோட்ட பொருளாதாரத்தின் ஆணி வேராகினர். Blight நோயின் தாக்கம் காரணமாக ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு இருந்த கோப்பிப் பயிர்ச் செய்கை வீழ்ச்சியடைந்த பின்னர், பிரித்தானிய தோட்டக் கம்பனிகள் தேயிலை மற்றும் ரப்பர் பயிர் செய்கைகை்கு மாறியிருந்தன.இந்த நிலையில் 1948ல் கொண்டுவரப்பட்ட இலங்கை குடியுரிமைச் சட்டம், 1948 ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையில் தங்கள் பிறப்பை நிரூபிக்கக்கூடியவர்களுக்கு மட்டுமே குடியுரிமையை வழங்கியது. மேலும் அவர்களின் தந்தை அல்லது தந்தைவழி தாத்தா இலங்கையில் பிறந்தார் என்பதை நிரூபிக்க வேண்டும் என இந்த சட்டம் வலியுறுத்தியது. இந்தச் சட்டத்தின் கடுமையான விதிகள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 சதவீத தமிழர்களுக்கு மட்டுமே குடியுரிமையை வழங்கியிருந்தன. இதனால் பெரும்பான்மையான இந்திய வழ்சாவழித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.1964 இல் ஸ்ரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தமும், 1974 ல் ஸ்ரீமாவோ – இந்திரா காந்தி ஒப்பந்தமும் அவர்களில் பெரும்பாலோரை இந்தியாவுக்கு கட்டாயமாக திருப்பி அனுப்பியிருந்தன. இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள பல்வேறு பெருந் தோட்டங்களில் குடியேற்றப்பட்டனர்.நிக்கோபாரில் உள்ள தொலைதூர கச்சல் தீவில், ஏற்கனவே அங்கு வாழ்ந்து கொண்டிருந்த நிக்கோபரி பழங்குடியின மக்களிடையே, இவ்வாறானதொரு கட்டாய குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது. அங்கு குடியேற்றப்பட்ட இந்திய வம்சாவழி இலங்கைத் தமிழர்களைக் கொண்ட 47 குடும்பங்கள், ரப்பர் தோட்டத்தில் பணிபுரிந்தன, கச்சலில் உருவாக்கப்பட்ட இந்த றப்பர் பெருந்தோட்ட திட்டம், மெதுவாக தோல்வியுற்ற திட்டமாக மாறியது.தற்போது, 1000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சுமார் 240 குடும்பங்கள், இந்தத் தொலைதூர பழங்குடி கச்சல் தீவில் வாழ்வதில் பெரும் கஸ்றங்களை எதிர்கொள்கின்றன. முன்னறிவிப்பு இல்லாமல் திட்டமிடப்படாமல் பழங்குடியினரின் வாழ்விடங்களில் குடியமர்த்துவதற்கான அரசாங்கத்தின் தனித்துவமான முடிவு அவர்களை ஆதரவற்ற நிலைக்கு தள்ளியுள்ளது.1956ல் ஏற்படுத்தப்பட்ட பழங்குடியினரின் பாதுகாப்பு என அழைக்கப்படும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒழுங்குமுறை (Regulation, 1956) என்ற ஏற்பாட்டின் கீழ் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பழங்குடிப் பகுதிகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த ஒழுங்குமுறை பழங்குடியினரல்லாதவர்கள், பழங்குடியினரின் வாழ்க்கையிலும் கலாச்சாரத்திலும் தலையிட்டால் தண்டனைக்கு வழிசெய்கிறது. அத்துடன் தமிழர்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ளும்படி, அவர்களின் ஒழுங்கு முறை கட்டாயப்படுத்துகிறது.அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளில் உள்ள பழங்குடிப் பகுதிகளின் உள்ளூர் நிர்வாகம், (பழங்குடியினர் சபை) அந்தமான் மற்றும் நிக்கோபார் ஒழுங்குமுறை 2009, என்ற சிறப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.. இதன் கீழ் நிக்கோபார் தீவுகளில் பஞ்சாயத்து ராஜ் முறையைப் போன்ற பாரம்பரிய பழங்குடியினர் சபை முறைமையே பின்பற்றப்படுகிறது.இந்த பாரம்பரிய நிறுவனமயப்படுத்தப்பட்ட பழங்குடியின ஒழுங்கு முறையில், முற்போக்கான மாற்றங்களை கொண்டுவர அரசாங்கம் முயற்சித்தாலும், சில பழங்குடி குடும்பங்கள் அந்தப் பாரம்பரிய நிறுவன முறைமையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.இந்த நிலையில் பழங்குடியினர் அல்லாதவர்கள் பழங்குடியினர் சபைகளில் அங்கத்துவத்தை பெற முடியாமையினால், மீள்குடியேற்றப்பட்ட இந்திய வம்சாவழி இலங்கைத் தமிழர்கள், எந்தவொரு அமைப்பு முறைமையிலும் பிரதிநிதித்துவத்தை பெற முடியாமல், அண்மைய ஆண்டுகளில் பழங்குடியின நிர்வாகிகளின் தயவில் தங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இங்கே இவர்களுக்கு மருத்துவ வசதிகள், கல்வி மற்றும் தகவல் தொடர்பு வசதிகள், மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயு உள்ளன. அத்துடன் குடியேற்றத்தில் சரியான கழிப்பறை வசதிகளும் இல்லை.எனினும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பழங்குடியினர் அல்லாத பகுதிகளில் குடியேறிய பிற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் ஒப்பீட்டளவில் சிறந்த நிலையில் வாழ்கின்றனர்.பழங்குடியினர் பகுதிகளில் நிலத்தின் உரிமை, வர்த்தகம் மற்றும் வணிக நடவடிக்கைகள் தொடர்பான அவர்களின் கட்டுப்பாடுகள், பழங்குடியினர் கவுன்சிலின் முடிவெடுக்கும் செயற்பாடுகளில் பங்கேற்காமை உள்ளிட்ட பல விடயங்களால், கச்சல் தீவில் மீள்குடியேறிய இந்தத் தமிழ் மக்களின் வாழ்வாதார வாய்ப்புகள் மெதுவாக இல்லாது போயின.இந்த நிலையில் இவ்வருடம் பழங்குடியினர் அல்லாத பகுதிகளில் தங்களை மீளக்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக வழங்கிய வாக்குறுதிகள் தோல்வியுற்று போயின. இதனை அடுத்தே தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட நிர்பந்திக்கப்பட்டதாக கச்சல் தீவு குடியேற்றவாசிகளின் நலன்புரிச் சங்கத்தின் இணைச் செயலாளர் லோரன்ஸ் ஜோர்ஜ் தோமஸ் தெரிவித்துள்ளார்.குறிப்பாக சுனாமிக்கு பிந்தைய நிலைமை பழங்குடியினருக்கும் குடியேறிய மக்களுக்கும் இடையில் அதிக தொடர்புகளை உருவாக்கியுள்ளது. இந்த நிலமை பழங்குடி கலாச்சாரத்திற்கு அதிக அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.அதனால் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளிலிருந்து, பழங்குடியினர் அல்லாதவர்களை வெளியேற்றுவதற்கான கோரிக்கைகள் வலுப்பெற்று உள்ளன. அத்துடன் நிக்கோபார் தீவுகள் பழங்குடியினருக்கே என்ற கோசமும் வலுப்பெற்று வருகிறது. இது கச்சல் தீவில் குடியேற்றப்பட்ட இந்திய வம்சாவழி இலங்கைத் தமிழர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.இவ்வாறான சூழலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் நிர்வாகம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கை தமிழர்களின் ஐந்து தசாப்த கால துன்பங்களையும் தனிமைப்படுத்தல்களையும் நிவர்த்தி செய்து சரியான வாழ்வாதார வாய்ப்புகளுடன் மீள்குடியேற்றுவதற்கான உணர்திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என முன்னாள் அந்தமான் தீவுகளின் சட்டக் கல்லூரி விரிவுரையாளரும், (Andaman Law College, Port Blair.) தற்போது பெங்களூர் கிறிஸ்துவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுபவருமான, கலாநிதி எஸ் வெங்கடநாராயணன் தனது பதிவில் வலியுறுத்தி உள்ளார்.Dr S .Venkatanarayananதமிழில் – நடராஜா குருபரன்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *