ஜேர்மனியில் இனந்தெரியாதநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
ஜேர்மன் நாட்டின் பெர்லின் மாகாணம் கிருஸ்பெர்க் மாவட்டத்தில் சமூக ஜனநாயக கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அந்த கட்சி தலைமை அலுவலகம் அருகே நேற்று துப்பாக்கியுடன் வந்த இனந்தெரியாதநபர் அப்பகுதியில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டார்.
இந்த திடீர் துப்பாக்கிச்சூட்டை சற்றும் எதிர்பாராத அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்கும் ஓடினர்.
ஆனாலும், இந்த தாக்குதலில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், ஒருவர் தனது உயிரை காப்பற்றிக்கொள்ள அருகில் இருந்த கால்வாய்க்குள் விழுந்ததில் அதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால், பொலிசார் வருவதற்கு முன்னதாகவே துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.
அவரை தேடும்பணியை பொலிசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், காயமடைந்த 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பெர்லின் மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் ஜேர்மனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.