கடற்புலி லெப். கேணல் நிலவன்

கடற்புலி லெப். கேணல் நிலவன்

என்றும் எம் இனத்திற்கு நிலவாய் இருப்பாய் நிலவா….

‘மனிதர்களின் இருப்பை விட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது’ என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு சிகரம் வதை;தாற்போல் எமது விடுதலைப் போராட்டத்திலும் கடற்புலிகள் அணியில் அலையாக ஆர்ப்பரித்து ஒரு தசாப்தகாலச் சக்கரத்தை தரைச்சமர், கடற்சமர், கனரக ஆயுதச் சூட்டாளன், அரசியல், நிர்வாகம், வழங்கல், கட்டளை அதிகாரி, கட்டளைத் தளபதி எனச்சுழன்று பல பக்கங்களையும் தன்னகத்தே கொண்டு செயல்படுத்திய ஒரு மாவீரனாம் நிலவன்.

ஒரு வீரனின் செயற்பாடுகள், அர்ப்பணிப்புக்கள், சாதனைகள், தியாகங்கள் என்பன எல்லாம் விடுதலையின் வெற்றிக்கான அத்திவாரங்கள். எனவே அந்த வீரர்களின் வரலாற்றை எங்கெல்லாம் பதித்து வைக்கலாமோ அங்கெல்லாம் பதியப்பட வேண்டும் அவ்வாறான ஒரு பதிவாக லெப்.கேணல் நிலவன் அவர்களின் வரலாற்றையும் பார்க்கலாம். ஏனெனில் எமது விடுதலையின் பின் எமது மாவீரர்களின் வரலாற்றை எதிர்கால சந்ததி பார்ப்பதன் ஊடாக எமது விடுதலைப் போராட்டத்தின் பெறுமதியை உணர்ந்து எமது நாட்டையும், மக்களையும் எமது மாவீரர்களின் கனவுலகத்திற்கு செயல்வடிவம் கொடுப்பார்கள்.

மிகவும் இறுக்கமான காலப்பகுதியில் விடுதலைப் போராட்டத்திற்கு வளம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அணியின் கட்டளை அதிகாரி லெப். கேணல் கலாத்தன் (மாவீரன்) அவர்களைச் சந்திக்க சென்ற போது இவர் சாயம் குடிப்பதில்லை. பால்தான் குடிக்கிறவர் என்று பால்க்கோப்பியுடன் வந்த நிலவனை அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து நிலவனது சந்திப்புக்கள் அதிகரிக்க அவருக்கும் எனக்குமான நட்பு இறுக்கமடைந்தது. அதேவேளை எமது அணியில் நிலவனது செயற்பாடுகளும் வேகம் பெறுகின்றது. நான் எதையும் செய்வேன் என்ற தன்னம்பிக்கையும் நிலவனிடம் மேலோங்கி இருந்தது. இதற்கு சான்றாக பின்வரும் சந்தர்ப்பத்தை நான் நேரில் காணக்கூடியதாக இருந்தது. அதாவது எமக்கு வழங்கப்படும் உணவில் சுவையின்மை, நேரம் தவறுதல் போன்ற பல பிரச்சினைகள் காணப்பட்டபோது எமது பொறுப்பாளரிடம் இதனைக் கூறினோம். அதற்கு உணவு சமைப்பது சண்டை பிடிப்பது, நடவடிக்கை செய்வது போன்று இல்லை. இங்கு பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும், சமாளித்துப் போகவேண்டும் என்றார். அப்போது ஏனைய போராளிகள் தரப்படும் பொருட்களை ஒழுங்காக சமைத்துத் தருவதற்கென்ன எனக்கேட்ட போது பொறுப்பாளர் தான் விசேட தளபதியிடம் கேட்டுச் சொல்லுகின்றேன். நீங்கள் யாராவது பொறுப்பெடுங்கள் என்ற போது ஒவ்வொருவரும் மற்றவர்களது முகத்தைப் பார்க்க நிலவன் எழுந்து நான் செய்கிறன் என்று கூறினான். அவன் சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் காட்டி எமக்கான உணவை சுவையாகவும் ஒழுங்காகவும் செய்து தந்தான்.

இவ்வாறாக நிலவனின் செயற்பாட்டை அவதானித்த சிறப்புத்தளபதி எமது படையணியின் வழங்கல் பொறுப்பாளராக நியமித்தார். அதிலும் தனது உச்ச திறமையை வெளிக்காட்டி வந்தான். இக்காலப்பகுதியில் புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் சமாதானம் ஏற்பட சிறப்பு அரசியல் வேலைக்காக மன்னார் மாவட்ட கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக கடமை ஏற்று அங்கு சென்றான். அங்கு ஒரு புதிய சூழலை நிலவன் எதிர்கொள்கின்றான். அதாவது மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரை மூவின மக்களின் செயற்பாடுகளும் நிறைந்து காணப்பட்ட ஓர் இடமாகும். எனவே இங்கு அரசியல் என்பது மிகவும் நுணுக்கமாக மேற்கொள்ளவேண்டி இருந்தது. அதற்கும் தன்னைப் பழக்கப்படுத்தி செயற்பட்டுவந்தான். இயல்பாகவே மக்களை நேசிப்பதிலும் அவர்களைத் தன்பக்கம் கவர்வதிலும் அவனுக்கு நிகர் அவனாகவே காணப்பட்டான். எனவேதான் அந்தச் சூழ்நிலையிலும் அவன் அரசியலை மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக அமைந்தது.

நிலவனிடம் இன்னுமொரு சிறப்பம்சம் காணப்பட்டது. கருத்துக்கள், அபிப்பிராயங்கள், ஆலோசனைகள் என்றால் யார் என்று பார்க்காமல் அவற்றைப் பெற்று பின்பு அந்த சூழ்நிலைக்கு ஏற்றதுபோல் முடிவுகளைத் தானே எடுத்து செயல்படுத்தியும் அன்றைய அரசியல் மற்றும் நடவடிக்கைகளுக்கு சிறப்பாக அமைந்திருக்கும். இவ்வாறான சூழலில் சுனாமி அனர்த்தம் நிகழ்ந்தது. இதன்போது இவனது செயற்பாடுகள், நடவடிக்கைகள் போன்றவற்றின் திறமையால் சிறப்புத்தளபதியினால் மன்னாரிலிருந்து வரவழைக்கப்பட்டு வடமராட்சி கிழக்கு அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகின்றார். இயல்பாக நிலவனிடம் இருந்த மக்களை நேசிக்கும் பண்பு, பிறரைக் கவர்கின்ற முகபாவம், எதையும் ஒழிவு மறைவின்றி நேரடியாகக் கதைக்கின்ற தன்மை. இவை எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்ட நிலவனின் ஆளுமையின் வெளிப்பாடே வடமராட்சி கிழக்கிற்கான சுனாமி மீள் கட்டுமானத்தில் துரித மாற்றங்களை ஏற்படுத்தியது. அதற்குச் சான்றாகவே வடமராட்சி கிழக்கில் உள்ள வீதிகள், வீடுகள், கட்டடங்கள், தொழில்சார் நிறுவனங்கள் போன்றன கண்முன்னே கூறி நிற்கின்றன. அத்துடன் மாவீரர் பெற்றோர்கள் வீடுகளுக்குச் சென்று அவர்களுடன் உறவாடி அவர்களது பிரச்சனைகளை ஆராய்ந்து அதனைச் சிறப்புத்தளபதியுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதில் மிகவும் அக்கறையாகச் செயற்பட்டான். இவ்வாறான நிலவனிடம் மனது நெகிழ்ச்சிப்போக்கு கொண்டது என்பதையும் ஒரு சந்தர்ப்பத்தில் கண்டேன் அதாவது ஓரு மாவீர்நாளை முன்னிட்டு மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நடைபெற்றது. அதன்போது மாவீரர் சிலரது திருவுருவப்படம் வைக்காமையை கண்ட பெற்றோர் வேதனையில் பேசிவிட்டார்க்ள. அப்போது நானும் அங்கு நின்று இவர்களை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று எண்ணிய வேளை எனக்கு அருகாமையில் விசும்பல் சத்தம் கேட்டது. திரும்பிப்பார்த்தேன் நிலவன் அழுதவண்ணம் இருந்தான். அங்கு ஒரு புதிய சூழல் உருவானது. அதாவது பெற்றோர் நிலவனை சமாதானப்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியது. இது நிலவனின் மனநெகிழ்ச்சிக்கு ஓர் உதாரணமாகும்.

பின் களச்சூழல் மாற்றம் அடைகிறது. தமிழரின் தலைநகரம் நிலவனைக் கடமைக்கு அழைக்கிறது. சிறப்புத்தளபதியின பணிப்பில் நிலவன் திருகோணமலைக்குச் சென்று தன்னுடைய கடமையில் ஈடுபடுகின்றான். பின்பு சூழ்நிலை மாற்றத்தால் சண்டைக்கு தன்னைத் தயார்ப்படுத்தி கடற்சண்டை அணியின் ஒரு தொகுதி வழிநடத்தல் அதிகாரியாக செயற்படுகின்றான். அங்கும் அவன் தனது முத்திரையைப் பதிக்கின்றான். மூதூரில் சண்டை நடைபெற்ற வேளை முதல் நாள் கடல் சண்டையில் எமது அணியின் சில கட்டளை அதிகாரிகளான லெப்.கேணல் தென்றல்மாறன், லெப்.கேணல் சூரியா, லெப்.கேணல் அலைஅழகி வீரச்சாவடைய பல போராளிகள் காயமடைந்து சில படகுகளும் திருத்தவேலை செய்யவேண்டி இருந்தமையாலும் அடுத்தநாள்ச் சண்டையில் கடலில் எமது பங்களிப்பு குறைந்து தரையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு சண்டையில் ஈடுபட்டோம். இந்த நேரத்தில் கடல் உதவி தேவைப்பட்டதால் நாம் உடனடியாக சில படகை தயார்ப்படுத்தினோம். அதில் முதலில் இறங்கிய இரண்டு படகுகளுக்கும் தானே கட்டளை அதிகாரியாக இறங்கி திருகோணமலைத் துறைமுகத்தில் இருந்து மூதூர் இறங்குதுறைக்கு வரும் இராணுவ உதவிகளை நிறுத்துவதற்கு இரண்டு துறைகளுக்கும் இடைப்பட்ட கடல்பகுதியில் நின்று சமராடி எதிரிகளின் நகர்வை பல மணிநேரம் நிறுத்தி அதிலும் ஓர் முத்திரையைப் பதித்தவன். இதில் நிலவன் சிறு விழுப்புண்ணை ஏற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் இவனது களமுனை வன்னி நோக்கி நகர்கிறது. பிற்பட்ட காலத்தில் வன்னியில் ஏற்பட்ட கடற்சமர்களில் நிலவனின் பங்களிப்பு ஏதோ ஒருவகையில் அமைந்திருக்கும். ‘எங்கடை கடல்லை நேவி திரியிறதை ஒரு காலமும் அனுமதிக்கக்கூடாது. அவனுக்கு அடிக்கவேணும், உடைக்கவேணும், தாக்கவேணும் என்று வெறிபிடித்தவன் போல கதைப்பான். அதைச் செயலிலும் காட்ட முற்படுவான் ஏனெனில் தலைவர் சொல்லைவிட செயலையே விரும்புவார் என்பது நிலவனுக்குத் தெரியும். தலைவரை மிகவும் ஆழமாக நேசித்தான். மாவீரர்களில் அளவு கடந்த பற்றுள்ளவனாக இருந்தான். இதற்கும் அவனே சான்று. ஏனெனில் கார்த்திகை 27 என்றால் தனது பணிக்கு நடுவிலும் அயலில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லம் சென்று தரிசித்துவிட்டு வருவான். இவ்வாறான பண்புகள் கொண்ட நிலவன் 26.12.2007 அன்று நெடுந்தீவுக் கடற்பரப்பில் டோரா மூழ்கடிப்புச் சமரில் வேறுபணி இருந்தபோதும் இச்சமரில் தானும் கலந்துகொள்ள வேண்டும் எனத் தளபதிகளுடன் சண்டையிட்டு அச்சமருக்கு சென்று தன்னுடைய தோழர்களுடன் நெடுந்தீவுக் கடலில் வீரகாவியம் ஆனார்கள்.

நிலவனுடைய அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் எல்லாவற்றையும் இதில் குறிப்பிட்டுவிட முடியாது. ஏனெனில் அவனது விடுதலைக்கான பயணம் என்பது மிகவும் நீண்டது. சில பக்கங்களையே இதில் குறிப்பிட்டுள்ளேன். செயல்வீரனுடைய கனவுகளை நனவாக்குவோம் என்ற நம்பிக்கையுடன் அவனுடைய பயணப்பாதையில் தடம் தொடர்ந்;து செல்கின்றோம்.

‘நிலவா பெயரில் மட்டும் நிலவாக இல்லாமல்
செயலிலும் நிலவாய் வாழ்ந்தவனே.
சிரிப்பின் சிகரமே என்றுடன் எம்முடன்
வாழ்ந்து கொண்டிருப்பாய்.

நினைவுப்பகிர்வு:
கு.இனியவன் (நண்பன்)
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள்.

நன்றி: நீலக்கடலின் நெருப்பு நிலவு.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *