இலங்கைக்கு தொடந்தும் நிதியுதவியை வழங்குவதற்கு அமெரிக்கா கடுமையான நிபந்தனையை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இலங்கை தனது இறைமையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலே நிதியுதவி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக தனது இறைமையை வலியுறுத்தும் நடவடிக்கைகளை இலங்கை எடுத்துள்ளது என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் உறுதி செய்தால் மாத்திரமே இலங்கைக்கு எதிர்காலத்தில் நிதியுதவி வழங்கப்படும் என அந்த சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை இன மற்றும் மதக்குழுக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்,ஆட்சி முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை அதிகரிக்க வேண்டும்,இலங்கை மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை அவர்களின் மத மற்றும் இன நம்பிக்கைகளை எதுவாகவிருந்தாலும் மதிக்க வேண்டும்.உறுதி செய்ய வேண்டும் குற்றங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்நிறுத்த வேண்டும் என அந்தச் சட்டமூலம் தெரிவித்துள்ளது.