2021ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு வாரத்தை ஜனவரி 05 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜனவரி 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 07 ஆம் திகதி வியாழக்கிழமை வரை முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 வரையும் , ஜனவரி 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை நாடாளுமன்றம் கூடும்.
ஜனவரி 05 ஆம் திகதி மற்றும் 07 ஆம் திகதி ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும். சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணி வரை இடம்பெறும்.
எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி எதிர்க்கட்சியால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்படும்.
ஜனவரி 08 ஆம் திகதி முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை எதிர்கட்சியால் முன்வைக்கப்படும் நாட்டின் தற்போதைய நிலைமை பற்றிய பிரேரணை சபை ஒத்திவைப்பு விவாதமாக முன்னெடுக்கப்படும்.
ஜனவரி 08 ஆம் திகதி முற்பகல் 9.30 மணி முதல் முற்பகல் 10.30 மணி வரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 05 ஆம் திகதி கடை, அலுவலக ஊழியர் திருத்த சட்ட மூலம் உள்ளிட்ட 04 திருத்த சட்ட மூலங்கள் விவாதத்துக்கு எடுக்கப்படுவதுடன், ஜனவரி 06 ஆம் திகதி தண்டனை சட்டக் கோவையின் திருத்தச் சட்டமூலம் உள்ளிட்ட 03 திருத்தச் சட்ட மூலங்கள் விவாதத்துக்கு எடுக்கப்படும்.
இதற்கு மேலதிகமாக, ஜனவரி 07 ஆம் திகதி புலமைச் சொத்து (திருத்த) சட்ட மூலம் இரண்டாம் வாசிப்பு மற்றும் விமான நிலைய வரி உள்ளிட்ட 10 கட்டளைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 10 மணி முதல் முற்பகல் 10.30 மணி வரை பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, நாடாளுமன்ற அமர்வு நாட்களில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.