சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை கொண்டு செல்லுமாறு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளர், உறுப்பு நாடுகளிடம் கூட்டாகக் கோருவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
அத்துடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையைக் கொண்டு செல்வதற்கான ஓர் அறிக்கையையும் தயாரிப்பதற்கும் இந்தக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்தத் தகவலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செ. கஜேந்திரன் தெரிவித்தார்.
வவுனியா குருமண்காடு விருந்தினர் விடுதியில் நேற்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் கட்சிகள் சந்தித்துப் பேசின. மேலும், ஜெனிவா விவகாரத்தைக் கையாள இந்த மூன்று கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம். ஏ. சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன் கட்சியின் பிரதிநிதி ஒருவர் என மூவர் கொழும்பில் கூடிப் பேசுவது என்று முடிவு எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் எம்.பி. தகவல் தருகையில், பொறுப்புக்கூறல் தொடர்பாக மனித உரிமைகள் கவுன்ஸிலில் எத்தனையோ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், அவை பூச்சியத்தில் இருக்கும் நிலையில் எதிர்காலத்தில் எவ்வாறான அணுகுமுறைகளை எடுப்பது என்பது தொடர்பாக இன்று பேசியிருந்தோம்.
2012இலிருந்து தமிழ்தேசிய மக்கள் முன்னணி அந்த விடயத்தில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை வலியுறுத்தி வந்திருக்கிறது. அது தொடர்பிலும் பேசப்பட்டது. மனித உரிமைகள் விடயத்தில் பொறுப்புக்கூறல் தொடர்பாக கட்சிகள் மட்டத்தில் இருக்கக்கூடிய பலவீனத்தை முழுமையாக விளங்கிக் கொள்ளக்கூடிய அளவிற்கு ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
மேலதிகமாக வட, கிழக்கை சேர்ந்த தமிழ்க் கட்சிகள் சிவில் அமைப்புகள் ஒரு புள்ளியில் சந்திக்கக்கூடிய வகையில் உறுப்பு நாடுகள் மற்றும் மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளர் ஆகியோருக்கு தெளிவான ஒரு செய்தியை வழங்க வேண்டியமை தொடர்பாகவும் இணக்கப்பாடு எட்டப்பட்டது. குறித்த விடயம் தொடர்பாக மேலதிகமாக செயல்பாட்டை முன்னெடுப்பதற்கு நானும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சிவில் சமூக பிரதிநிதிகளின் அமைப்பும், விக்னேஸ்வரனுடைய அமைப்பு உள்ளிட்ட ஒரு குழு இணைந்து ஒரு புள்ளி என்ற விட யத்தை எழுத்து மூலம் ஆவணப்படுத்து வதற்கு இணங்கியிருக்கிறோம். மிகவிரை வில்அது முன்னெடுக்கப்படும். அதனை ஒரு ஆரம்பமாக வைத்து அடுத்தகட்ட சந்திப்புகளை மேற்கொள்வதற்கு நாம் இணங்கியிருக்கிறோம்” என்றார்.
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் எஸ். சிவகரனின் ஒருங்கிணைப்பில் நேற்று இடம்பெற்ற இந்தச்சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்பதில் பொதுச் செயலாளர் ப. சத்தியலிங்கம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம், ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் தலைவர் திருமதி அனந்தி சசிதரன், காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரதிநிதிகள், வடக்கு – கிழக்கு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆன்மீகத் தலைவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்