பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட 2 நாட்களில் பெண் சுகாதார ஊழியர் உயிரிழந்தமை போர்த்துக்கலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போர்த்துகல் நாட்டில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி கடந்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முன்கள ஊழியர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், அந்நாட்டின் போர்ட்டோ நகரில் உள்ள மருத்துவமனையில் சுகாதாரத்துறை ஊழியராக பணியாற்றி வந்த சோனியா அக்விடோ என்ற 41 வயது நிரம்பிய பெண்ணுக்கு கடந்த 30-ம் திகதி பைசர் நிறுவன தடுப்பூசி போடப்பட்டது.
பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின்னர் சோனியாவுக்கு எந்த விதமான உடல்நலக்குறைவும், பக்கவிளைவுகளும் ஏற்படாமல் இருந்தது.
இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் 2 நாட்கள் கழித்து (48 மணி நேரம்) சோனியா கடந்த 1-ம் திகதி திடீரென உயிரிழந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தனது தந்தை வீட்டிற்கு வந்திருந்த சோனியா எந்தவித உடல்நலக்குறைவுக்கும் உள்ளாகாமல் திடீரென உயிரிழந்தார்.
இதையடுத்து, உயிரிழந்த சோனியாவின் உடலை கைப்பற்றிய போர்த்துகல் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்த உள்ளனர். உடற்கூறு ஆய்வு இன்று நடைபெற உள்ளது. இந்த உடற்கூறு ஆய்வில் தான் சோனியா எப்படி உயிரிழந்தார் என்பதற்கான முழுமையான விவரம் வெளிவரும்.
சோனியாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி விளக்கம் அளிக்க வேண்டுமென அவரது தந்தை வலியுறுத்தியுள்ளார்.