கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாகவோ அல்லது பகுதியளவில் கூட வெளிநாடுகளுக்கு வழங்கும் எண்ணம் தமக்கு கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உறுதிபட தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு துறைமுகம் எமக்கு மிகவும் முக்கிய கேந்திர நிலையமாகும்.எனினும் கடந்த நல்லாட்சி அரசில் கொழும்பு கிழக்கு முனைய அபவிருத்தி குறித்து 2017 இல் இந்தியாவுடனும் 2019 இல் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் இரண்டு உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டன. அதன்பின்னர் நாம் பல நெருக்கடிக்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது.
எனவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ அல்லது முகாமைத்துவத்தையோ வெளிநாட்டிற்கு கையளிக்கும் எண்ணம் கிடையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் நின்றவேளை பிரதமர் மகிந்த ராஜபக்ச மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளமை முக்கியத்துவம் பெறுகின்றது.