முதன் முதலாக தமிழ் கட்சிகளும், சிவில் சமூகங்களும் கடந்த 11 ஆண்டுகளிலே ஒரு குடையின் கீழ் வந்து ஜெனிவா விவகாரத்தை எவ்வாறு கையாள்வது என்ற ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்விற்கு மூன்று தரப்பும் இணங்கி வந்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம் என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.
மன்னாரில் இன்று காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர் வரும் ஜெனிவா மனித உரிமைகள் விவகாரத்தில் எவ்வாறு ஒற்றுமையாக தமிழ் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பாக பிரேரணையை முன் வைக்கலாம் என்ற நோக்கில் கடந்த 8 ஆண்டுகள் எங்களிடையே ஒற்றுமையீனம் இருந்த காரணத்தினால் எவ்வாறாக இருந்தாலும் இவற்றை ஒருங்கிணைத்து ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் ஒரு வலிமையான கருத்தியலை முன் வைப்பதற்காக பல ஆண்டுகள் பல்வேறு விதமான முயற்சியை மேற்கொண்டோம்.
பல்வேறு விதமான கருத்தரங்குகளையும் நாங்கள் உள்ளக ரீதியாகவும், வெளியக ரீதியாகவும் கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து பகிரங்கமாக சகல மாவட்டங்களிலும் முன்னெடுத்தோம்.
அந்த வகையில் தான் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி கிளிநொச்சியில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த சிவில் சமூகம், தமிழ் தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து நாங்கள் இவ்வாறான ஒரு நிகழ்ச்சி நிரலை ஜெனிவாவிற்கு அப்பால் எவ்வாறு கொண்டு செல்லலாம்.
செல்வதற்கு இந்த ஒருங்கிணைவின் அவசியம் சம்மந்தமாக பாதிக்கப்பட்ட தரப்பினரையும் இணைத்து கலந்துரையாடல் நடத்தி இருந்தோம்.
அவ்வாறான ஒரு கலந்துரையாடல் என்பது ஒரு ஆக்கபூர்வமாக அமைந்ததன் காரணமாக முதன் முதலாக தமிழ் கட்சிகளும், சிவில் சமூகங்களும் கடந்த 11 ஆண்டுகளிலே ஒரு குடையின் கீழ் வந்து ஜெனிவா விவகாரத்தை எவ்வாறு கையாள்வது என்ற ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்விற்கு மூன்று தரப்பும் இணங்கி வந்துள்ளமை வரவேற்கத் தக்க விடயம்.
அவ்வாறான ஒரு நல்ல காரியத்தை முன்னெடுத்த எங்கள் மீது மிகவும் அவதூறான , உண்மைக்குப் புறம்பான செய்தியை கிளிநொச்சியை சேர்ந்த பெண் வழங்கி உள்ளார்.
குறித்த பெண் ஒரு பாதிக்கப்பட்டவர். அவரை நாங்கள் மதிக்கின்றோம். அவர் தானாக அவ்வாறான கருத்தை முன் வைக்கவில்லை. வெளி நாட்டில் அல்லது உள் நாட்டில் இருந்து குறித்த பெண்ணை இயக்குகின்றனர்.
இவ்வாறான ஒரு ஒற்றுமை முயற்சியை குழப்புவதற்காக அவர்கள் எழுதிக் கொடுத்து இந்த பெண்ணை அழைத்து ஊடகவியலாளர் சந்திப்பில் மிகவும் தவறான கருத்துக்களையும், தவறான விவகாரத்தையும் குறிப்பாக இந்திய இலங்கை புலனாய்வாளர்களின் ஏற்பாட்டில் தான் இவ்வாறான கூட்டங்களை நடாத்துகின்றோம் என்கின்ற நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனையும் எங்களுடன் இணைத்து கதைத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இந்த கூட்டத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இவ்வாறான ஒற்றுமை முயற்சியை நாங்கள் மேற்கொண்டு இருந்தோம்.
எனவே அவதூறான செய்தியை வெளியிட்டு எங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி உள்ளார். அவரிடம் மான நஸ்ட வழக்கு கோரி சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பி வைத்துள்ளோம்.
நல்ல நோக்கத்திற்காக செயல் படுகின்றவர்கள் மீது அவதூறான செய்திகளை பரப்பி தவறான கண்ணோட்டங்களில் இவ்வாறான நிலமையை பகிரச் செய்வது சமூக செயல்ப்பாட்டில் இருக்கின்ற எங்களுக்கு கவலையை ஏற்படுத்துகின்றது.
நாங்கள் அந்த பெண்ணிற்கு எதிரானவர்கள் இல்லை. அவரும் பாதிக்கப்பட்ட ஒரு தாய். அவரை மதிக்கின்றோம். அவரின் செயல் பாட்டை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் அவரை வழி நடத்துபவர்கள் தவறான பாதையில் வழி நடத்தவதினால் தான் இவ்வாறான ஒரு கருத்துக்களை குறித்த பெண் வெளியிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சென்றிருந்தோம். வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்புக்களின் தலைவர்களும், அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளாரும் வருகை தந்திருந்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்குச் சென்று வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறக்கக்கூடாது எனவும், 6 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கக்கூடாது என்றும் நாங்கள் ஓ.எம்.பி உறுப்பினர்களை சந்தித்து தெரிவித்தோம்.
சாட்சியம் உள்ள 5 வழக்குகளை எம்மிடம் கேட்டார்கள். அதனையும் நாங்கள் கொடுத்தோம். ஓ.எம்.பி.ஒன்றும் இல்லை என்பதனையும் நாங்கள் உறுதிப்படுத்தினோம்.
கடைசியில் அந்த சந்திப்பையும் தவறாக சித்தரித்து கதைத்துள்ளனர். சமூக செயற்பாட்டாளர்கள் மீது இவ்வாறு அவதூறை ஏற்படுத்துகின்ற வகையில் செயல்ப்படுகின்றவர்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இவ்வாறான செயலைக் கண்டு நாங்கள் அசந்து விடமாட்டோம். எங்களின் பணி தொடரும் என்பதனை தெரிவித்துக் கொள்ளுகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்க இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர் பெனடிற் குரூஸ் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.