நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அதிகாரப்பகிர்வு விடயத்தில் இருப்பதை தக்கவைத்து பாதுகாப்பதாக அனைத்து தமிழ் தரப்பினரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாகச் செயற்பட வேண்டியது அவசியம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தமிழ்ப் பிரதிநிதிகளிடத்தில் வலியுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழ்த்தரப்பிடையே அரசியல் மற்றும் கொள்கையளவில் வேறுபாடுகள் காணப்பட்டாலும், அதிகாரப்பகிர்வு விடயத்தில் மட்டுமாவது முதலில் இருப்பதை தக்கவைப்பதற்காக அனைவரும் பேதங்களை ஒன்றிணைய வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அறியமுடிகின்றது. விசேடமாக, மாகாண சபைகள் முறைமை நீடிக்க வேண்டும் என்பதிலும், தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதிலும் இந்தியா உறுதியாக இருந்தாலும் உள்நாட்டில் அதுபற்றிய அதிக கரிசனையை தமிழ்த் தரப்புக்கள் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த விடயத்தில் தமிழ்த் தரப்புக்கள் அணைத்தும் ஒன்றிணைந்து மக்கள் ஆணை பெற்ற அரசாங்கத்திடம் கோரிக்கைகளை விடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இரண்டு வருடங்களுக்கு மேலாக மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாதுள்ள நிலையில் அதனை முன்னெடுப்பதற்குரிய செயற்பாடுகளை தமிழ்த் தரப்புக்களை ஊக்கத்துடன் மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளர்.
மாகாண சபை விடயத்தில் அரசாங்கத்தின் சில தரப்பினரின் பிரதிபலிப்புக்கள் மாறுபட்டதாக இருக்கின்ற நிலையில், அவற்றுக்கான தேர்தலும் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாத நிலைலும் தற்போதுள்ளது.
இத்தகையதொரு தருணத்தில் தமிழ்த் தரப்புக்கள் பிரிந்து நிற்பதாலும், அல்லது தனித்தனியாக நின்று மாகாண சபைகள் பற்றி வலியுறுத்துவதாலும் நன்மைகள் எதிர்பார்க்குமளவிற்கு கிடைப்பதில் தாமதங்கள் நீடித்துச் செல்லும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தமிழ்த் தரப்பில் ஒற்றுமையில்லாது பிரிந்து நிற்கின்றதால் ஏற்படுகின்ற பலவீன் மாகாண சபை முறைமை உட்பட அனைத்துவிடயங்களையும் அமுலாக்கதிருப்பதற்கான நியாப்படுதல்களுக்கான காரணங்களை கூறுவதற்கு வாய்ப்புக்களையே ஏற்படுத்துகின்றது என்றும் அவர் தெரிவித்தாக மேலும் அறிய முடிகின்றது.