யாழ்.பல்கலைக்கழகம் வவுனியா வளாகத்தின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ஜெயசீலன் ஞானசீலனின் ‘தேசிய மோதல்கள் மற்றும் சர்வதேச தலையீடுகள் தொடர்பான ஊடக சொற்பொழிவு’ எனும் நூல் வெளியீடு நேற்று(வியாழக்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழ வவுனியா வளாகத்தில் இடம்பெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில் முதன்மை அதிதியாக பேராசிரியரும், தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான ரட்ணஜீவன் கூல் கலந்துகொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக யாழ்.பல்கலைகழக வவுனியா வளாகத்தின் முதல்வர் ரி.மங்களேஸ்வரன், அரச அதிபர் சமன் பந்துலசேன, பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக இந்த நூல் வெளியீட்டுக்கு புலனாய்வுப்பிரிவினர் தடை ஏற்படுத்திய போதும் நீண்ட முயற்சியின் பின்னர் அதனை வெளியிட அனுமதிக்கப்பட்டதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.
குறித்த நூலின் ஆங்கில மூலம், புலனாய்வுப்பிரிவினருக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் அதனை நன்கு படித்தறிந்த பின்பே வெளியீட்டுக்கு அனுமதி அளித்ததாக நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய துணைவேந்தர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.