யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் எழுப்பப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண்-நினைவு முற்றத்தை இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்து விட்டு சிங்கள அரசின் ஏவுதலின் பேரில் இராணுவத்தினர் இடித்துத் தகர்த்துள்ளனர். இது கொடுமையிலும் கொடுமை ஆகும்.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று திரும்பிய 48 மணி நேரத்திற்குள் இந்த அராஜகத்தை சிங்கள அரசு செய்துள்ளது. இந்திய அரசு, சிங்கள அரசுடன் கொஞ்சிக் குலாவுவதால் நாம் என்ன செய்தாலும் உலகத்தில் கேள்வி கேட்பார் யார்? என்ற மமதையும், திமிரும் தலைக்கு ஏறி உள்ளது.
சுதந்திரத் தமிழ் ஈழத்திற்குத் தீர்மானம் போட்ட அ.தி.மு.க. அரசு என்ன செய்யப் போகிறது?
யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் நினைவு முற்றமும் நினைவுத் தூணும் அமைக்கப்பட வேண்டும். சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலைக்கு எதிராக முத்துக்குமார் உள்ளிட்ட 19 வீரத் தமிழர்கள் தீக்குளித்து மாண்டனரே, அந்த நெருப்பு நம்முடைய நெஞ்சிலே பற்றட்டும்.
இலங்கைத் தீவில் கோட்டாபய ராஜபக்சவின் அரசு, அனைத்துலக நீதிமன்றக் குற்றக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். நடைபெற்ற அக்கிரமத்தைக் கண்டித்து சிங்கள அரசுக்கு இந்திய அரசு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.
நெஞ்சை பதற வைக்கும் இந்தக் கொடிய சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் வருகிற 11-ம் திகதி காலை 11 மணிக்கு என்னுடைய தலைமையில் நடைபெறும். தமிழ் உணர்வாளர்கள், ஈழத் தமிழ் உணர்வாளர்கள், கழகக் கண்மணிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வேதனையோடு வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்புக்கெதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன் எதிர்வரும் 11 ஆம் திகதி சென்னையிலுள்ள இலங்கை தூதரகம் முற்றுகையிடப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.