முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் கைதாகி தற்போது பிணையில் விடுதலையான பிள்ளையானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த வழக்கினைக் கைவிடுவதாக மட்டக்களப்பு நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் தெரியப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப்பின்னணியில் புதனன்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2005ம் ஆண்டு மட்டக்களப்பு தேவாலயத்தில் இடம்பெற்ற நத்தார் தின ஆராதனையின்போது ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொலை செய்யப்பட்டதோடு அவரது மனைவியும் காயமடைந்திருந்தார்.
இவ்வழக்கில் கைதாகிய பிரதான சந்தேக நபரான பிள்ளையானுக்கு நவம்பர் மாதம் பிணை வழங்கப்பட்ட அதேவேளை பிள்ளையான் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் என்பதுடன் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.