போர் குற்றம்:சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்- கஜேந்திரகுமார்

போர் குற்றம்:சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்- கஜேந்திரகுமார்

தமிழினத்துக்கு எதிராகத் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் மட்டுப்படுத்தாது, அதனை அதற்கு அப்பால் அதாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று இலங்கைக்கான  வதிவிடப்பிரநிதி ஹனா சிங்கரிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் அரசாங்கம் பொறுப்புக்கூறுவது அவசியம். அதிலிருந்து எந்த ஆட்சியாளர்களாலும் விலகிச்செல்ல முடியாது. பொறுப்புக்கூறல் செய்யப்படாது நல்லிணக்கம் சாத்தியமே இல்லை.இதற்கான அழுத்தங்கள் எதிர்வரும் காலங்களில் மேலும் வலுவடையும். இந்த விடயங்களை அரசாங்கத்திடம் திடமாக எடுத்துக் கூறும்படியும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.க்கும் இடையிலான சந்திப்பு  கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.
இச்சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
தேர்தல் முடிவுகளின் பின்னர் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் முக்கியஸ்தர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு அமைவாகவே இந்தச்சந்திப்பு இடம்பெற்றது.

இந்நிலையில் முதலில் தற்போதைய அரசாங்கம் தொடர்பான செயல்பாடுகள் தொடர்பில் பேசப்பட்டது. இதன்போது அரசாங்கம் முன்னெடுத்துவரும் புதிய அரசமைப்பு சாத்தியமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த நான்: புதிய அரசமைப்பு கொண்டுவருவார்கள் என்று நம்பிக்கை கொள்ளவில்லை.
ஒருவேளை புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட்டாலும், ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறிவரும் ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தேசங்கள் அங்கீகரிப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை வழங்க மாட்டார்கள் என்பது உறுதியான விடயமாகும் என்று கூறினேன்.

அதனைத் தொடர்ந்து ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தினார்.

இதன்போது இலங்கை நிகழ்த்திய இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பான விடயத்தில் நீதியைப் பெற்றுக்கொள்வதாக இருந்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் இலங்கை விவகாரத்தை மட்டுப்படுத்தி வைத்திருப்பதனால் எவ்விதமான பயனும் ஏற்படப்போவதில்லை.
ஆகவே, இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகும்.

மேலும்; மாறிமாறி எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் உள்நாட்டில் பொறுப்புக்கூறல் வியடத்தை நடைமுறைப்படுத்தும் மனோநிலையில் இல்லை என்பது கடந்த பத்து வருடங்களாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே தான் ஐ.நா.உள்ளிட்ட சர்வதேச தரப்பை நாம் கோரிக் கொண்டிருக்கின்றோம் என்று குறிப்பிட்டேன்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *