படிப்படியாக பறிபோகும் தமிழர் உரிமைகள் – நிலாந்தன்

படிப்படியாக பறிபோகும் தமிழர் உரிமைகள் – நிலாந்தன்

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்குப்பின் மறுபடியும் இலங்கை இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் மாகாண சபைகளின் மீது கவனம் குவிந்திருக்கிறது. மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக சில தினங்களாக பேசப்படுகின்றது. ராஜபக்சக்களின் இரண்டாவது ஆட்சி இம்மாதத்தோடு ஓராண்டைப் பூர்த்தி செய்கிறது. இந்த ஓராண்டுக் காலகட்டத்தில் மாகாண சபைகள் தொடர்பில் ராஜபக்சக்களும் அவர்களுக்கு நெருக்கமான அமைச்சர்களும் தெரிவித்துவரும் கருத்துகளைத் தொகுத்துப் பார்த்தால், அவர்கள் மாகாண சபைக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற ஒரு தோற்றமே கிடைக்கும்.

அதிபர் பதவியேற்ற புதிதில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட கோத்தபய, இந்தியாவில் வைத்தே சொன்னார், ‘மாகாண சபைகளுக்குக் காணி அதிகாரத்தையும் போலீஸ் அதிகாரத்தையும் வழங்க முடியாது’ என்று. ஆனால், மாகாண சபைகள் சட்டத்தின்படி, அதாவது இந்திய-இலங்கை உடன்படிக்கையின் படி மாகாண சபைகளுக்குக் காணி அதிகாரமும் போலீஸ் அதிகாரமும் உண்டு. ஆனால், கடந்த 33 ஆண்டுகளாக ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் இந்த அதிகாரங்களைத் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை. அதாவது, யாப்பில் இருப்பதையே நிறைவேற்றாத ஒரு நிலை. அதுமட்டுமல்ல, அவ்வப்போது மேற்கொண்ட சட்டத் திருத்தங்கள் மூலம் மாகாணத்தின் பல அதிகாரங்களை மத்திக்கு எடுத்துக் கொண்டார்கள். இப்போதிருக்கும் மாகாண சபைகள் பெருமளவு அதிகாரமற்ற அமைப்புகளே.இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் ராஜபக்சக்கள் ஒரு புதிய யாப்பை உருவாக்கப் போவதாகக் கூறுகிறார்கள். ஒரு புதிய யாப்பு ஏன் தேவை? நடப்பு யாப்பு தோல்வியுற்ற படியால்தானே? நடப்பு யாப்பு ஏன் தோல்வியுற்றது? ஏனெனில் அது இலங்கைத்தீவை ஒரு தேசமாகக் கட்டியெழுப்பத் தவறிவிட்டது என்பதால்தானே? ஆயின் இச்சிறிய தீவை ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவதற்கே ஒரு புதிய யாப்புத் தேவை. அதை இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திலிருந்துதானே கட்டி யெழுப்பலாம்? இதுதான் உலகளாவிய அனுபவம். ஆனால் ராஜபக்சக்கள் கடந்த ஓராண்டுக் காலமாகத் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் எதிராகத்தான் நாட்டை நிர்வகித்து வருகிறார்கள்.

யாழ் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் சில தினங்களுக்கு முன் இடிக்கப்பட்டது.பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது அரசாங்கம் அழுத்தங்களைப் பிரயோகித்து அதைச் செய்யத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப் படுகிறது. இது தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமைக்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடு.

முஸ்லிம்களின் விவகாரத்திலும் அப்படித்தான்.கோவிட் 19-னால் இறந்துபோகும் முஸ்லிம்களின் உடல்களைக் கட்டாயமாக எரிக்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டளையிட்டிருக்கிறது. இது இறந்த உடல்களைப் புதைக்கும் முஸ்லிம்களின் மார்க்க உணர்வுகளுக்கு முரணானது. உலகம் முழுவதிலும் பெரும்பாலான நாடுகளில் கோவிட் 19-னால் இறந்தவர்களின் உடல்கள் புதைக்கப்படும்பொழுது இலங்கை அரசாங்கமோ ஒரு நோய்த் தொற்றுச் சூழலை ஒரு சிறிய மக்கள் கூட்டத்துக்கு எதிராகத் திருப்பியிருக்கிறது.

மேலும், கடந்த ஓராண்டுக் காலமாக ராஜபக்ச நாட்டை அதிகரித்த அளவில் ராணுவமயப்படுத்தி வருகிறார். கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நாட்டின் ராணுவத் தளபதியே பொறுப்பாக இருக்கிறார். அவர் அமெரிக்காவினால் பயணத்தடை விதிக்கப்பட்ட ஒருவர். மேற்கு நாடுகளால் போர்க்குற்றம் சாட்டப்படும் அதிகாரிகளைப் பொறுப்புகளில் அமர்த்தி, ‘அவர்களோடுதான் மேற்கு நாடுகளின் தூதுவர்கள் உத்தியோகபூர்வமாக உரையாட வேண்டும்’ என்ற ஒரு நிலைமையை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது.

அதிகம் ராணுவமயப்பட்ட, இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாத ஒரு அரசியற் சூழலில்தான் ஒரு புதிய யாப்பை உருவாக்கப்போவதாக ராஜபக்சக்கள் ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப் பியிருக்கிறார்கள்.

அரசாங்கம் ஒரு புதிய யாப்பை உருவாக்குமா என்பதே சந்தேகம். அப்படி உருவாக்கினாலும் அது இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதாக இருக்காது. இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காக ஒரு மாகாணக் கட்டமைப்பையோ அல்லது இணைந்த மாகாணங்களைக் கொண்ட பிராந்தியக் கட்டமைப்பையோ அல்லது வேறு ஏதாவது ஒரு தீர்வையோ அவர்கள் உருவாக்கலாம். ஆனால் அக்கட்டமைப்புக்குள் காணி அதிகாரம், போலீஸ் அதிகாரம் உள்ளிட்ட ஏனைய அதிகாரங்கள் கிடைக்குமா என்பது சந்தேகமே.

மாகாணக்கட்டமைப்பு என்பது இந்திய-இலங்கை உடன்படிக்கையின் குழந்தை. இந்திய – இலங்கை உடன்படிக்கை எனப்படுவது இலங்கைத் தீவில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பது. ஆனால், இப்பொழுது இலங்கைத்தீவு அதன் வரலாற்றில் முன்னெப்போதையும்விட அதிகரித்த அளவில் சீன மயப்பட்டுவிட்டது. நடைமுறையில் இந்திய – இலங்கை உடன்படிக்கையின் அடிப்படைகளை மீறுகிறது. இப்போது அந்த உடன்படிக்கையின் ஓரளவுக்காயினும் மிஞ்சியிருக்கும் ஒரே பகுதி மாகாண சபைகள்தான். எனவே, அதைப் பாதுகாக்க இந்தியா விரும்பக்கூடும்.

இந்திய வெளியுறவு அமைச்சரின் விஜயம் அவ்வாறு மாகாண சபைகளைப் பாதுகாக்கும் நோக்கிலானதாகவும் இருக்கலாம்; அல்லது கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குமுனையத்தை நிர்மாணிக்கும் பணிகளை இந்திய நிறுவனமான அதானி குழுமத்திடம் கையளிப்பதாக ராஜபக்சக்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றுவார்களா என்பதனை உறுதிப்படுத்தும் நோக்கிலானதாகவும் இருக்கலாம்.

இந்த இடத்தில் ஏறக்குறைய 30ஆண்டுகளுக்கு முன் ஜெய்சங்கர் இலங்கையில் வேலை பார்த்தபொழுது நடந்த ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். இலங்கைத்தீவில் இந்திய அமைதி காக்கும் படை நிலைகொண்டி ருந்த காலகட்டத்தில் ஜெய்சங்கர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் வேலை செய்தார். இலங்கைத் தீவின் முதலாவது மாகாணசபைத் தேர்தலின்போது அவர் கொழும்பில் தான் இருந்தார். தேர்தலுக்குப்பின் 1990-ம் ஆண்டு அவர் மாற்றலாகிச் சென்றபோது அவருக்கு டெலோ இயக்கம் ஒரு விருந்து வைத்தது.

கொழும்பில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடந்த இந்த விருந்தில் கலந்துகொள்ள ஜெய்சங்கர் தன்னுடைய சிறிய மகனையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார். விருந்தின் முடிவில் விடைபெறும் வேளை அவர் டெலோ இயக்க உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் பின்வருமாறு கூறியிருக்கிறார், “இந்தப் பையன் வளர்ந்து பெரியவன் ஆனாலும்கூட உங்களுடைய பிரச்னை தீரப்போவதில்லை” என்று. இது ராஜபக்சக்கள் தமிழ் மக்களுக்குத் தரக்கூடிய தீர்வுக்கும் பொருந்துமா?

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *