நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றைய தினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 13 உறுப்பினர்களும், எதிராக இரண்டு உறுப்பினர்களும் வாக்களிக்க, மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.
அத்தோடு முன்னாள் தவிசாளர் உட்பட இரண்டு உறுப்பினர்கள் சபை அமர்பில் கலந்துகொள்ளவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கை தமிழரசு கட்சியியை சேர்ந்த மூன்று ஊறுப்பினர்கள் நடுநிலை வகிக்க, ரெலோவை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அதேபோன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மூன்று உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க, இரண்டு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.
அத்தோடு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் சுயேச்சை குழு உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதன் மூலம் சபையின் வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்த நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்னாள் தவிசாளர் த.தியாகமூர்த்தியினால் இரண்டு தடவைகள் சமர்ப்பிக்கப்பட்டு தோல்வியடைந்த நிலையில் தவிசாளர் தனது பதவியை இழந்திருந்தார்.
இதனால் சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்யும் கூட்டம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற போது புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ப.மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.