புளோரிடாவில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு செல்ல உள்ளார் – டொனால்ட் ட்ரம்ப்

புளோரிடாவில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு செல்ல உள்ளார் – டொனால்ட் ட்ரம்ப்

தனது பதவிக்காலம் முடிந்த பின்னர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறி புளோரிடாவில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு செல்ல உள்ளார் என அவரை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார்.

குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் தோல்வியடைந்தனர்.

இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6 ஆம் திகதி நடைபெற்றது.

அப்போது நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் பொலிஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தை தொடர்ந்து அதிகாரத்தை கையில் எடுத்த துணை அதிபர் மைக் பென்ஸ் தேசிய பாதுகாப்பு படையினரை அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பணியில் அமர்த்தினார்.

அதிபர் டடரம்பின் உத்தரவின்றி துணை அதிபர் மைக் பென்ஸ் இந்த உத்தரவை பிறப்பித்தார். மேலும், அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றார் என்ற அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பென்ஸ் உறுதிபடுத்தினார்.

இந்தநிலையில், எதிர்வரும் 20-ம் திகதி 46-வது அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளார்.

பதவியேற்பு விழாவில் தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் பங்கேற்க உள்ளார். ஆனால், ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்கப்போவதில்லை என தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஜோ பைடன் பதவியேற்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாகவே டொனால்ட் ட்ரம்ப் வெள்ளைமாளிகையிலிருந்து வெளியேறி வொஷிங்டன்னில் இருந்து விமானம் மூலம் புளோரிடா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லஹொ என்ற தனது பிரம்மாண்டமான பண்ணைவீட்டில் குடும்பத்தினருடன் ட்ரம்ப் குடியேற உள்ளார். புளோரிடா கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட பண்ணைவீட்டில் தங்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் தன்னுடன் வெள்ளைமாளிகையில் பணிபுரிந்த சிலரையும் பண்ணைவீட்டில் பணிக்கு அழைத்து செல்ல உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *