இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனேவியில் அமைந்துள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுயுள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிரான கோவீஷீல்ட் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது எனவும் அவ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருப்பதால் மருந்து தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் தீப்பிடித்துள்ளது. இதன் காரணமாக அச்சமடைந்த ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.
தீ விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்புப்படை வீரர்கள் 10 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அங்கு சிக்கியிருந்து 4 பேரில் 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்” என தீயணைப்புத்துறை அதிகாரி பிரசாந்த் ரன்பிசே கூறியுள்ளார்.
இந்தியா மட்டும் அல்லாது பல நாடுகளும் இங்கு தயாரிக்கப்படும் தடுப்பூசிகளையே சார்ந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.