தான் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வேறொரு நாட்டிற்கு விற்பனை செய்வதை எதிர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வாந்துவவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலும் வெளிநாட்டு நிறுவனங்கள் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
எனினும் நான் எந்த வெளிநாட்டு சக்திக்கும் கிழக்கு கொள்கலன் முனையத்தை வழங்குவதில்லை என சபதமெடுத்தேன். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இதேகொள்கையை கொண்டிருந்தது.
இதன்காரணமாக கொழும்புதுறைமுக கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பான திட்டத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசாங்கத்திற்குள் பல பிரச்சினைகள் காணப்பட்டன பலர் இது தொடர்பில் வேண்டுகோள் விடுத்தார்கள் ஆனால் நான் அதனை கட்டுப்படுத்திவிட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்பனை செய்யப்படுவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.