இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பரிந்துரைகளை வழங்கவென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார்.
இது தொடர்பாக கடற்றொழில் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடலோர காவல் படையினருடன் கலந்துரையாடி இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் சட்ட விரோதச் செயற்பாடுகளை நிறுத்த நிரந்தரத் தீர்வைக் கண்டறிய மீன் பிடி அமைச்சுக்கு பரிந்துரைகளை வழங்கவுள்ளனர்.
இந்திய மீனவர்களின் சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக இலங்கை மீனவர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன் இலங்கையின் கடல் வளங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.
இதன்விளைவாக இது போன்ற சட்ட விரோத செயற்பாடுகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கக் கோரி இலங்கை மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.