கிராமங்களிலுள்ள வீடுகளில் வளர்க்கப்படும் வாத்து, கோழி, மற்றும் கால்நடைகள் எழுப்பும் ஒலி, மிகுந்த தொந்தரவு அளிப்பதாக பிரான்ஸ் நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
விடுமுறைக்காலங்களில் தற்காலிகமாக கிராமங்களை நோக்கி வருபவர்கள் தான் இது போன்ற வழக்குகளை அதிக எண்ணிக்கையில் தொடர்கின்றனர்.
இவ் வழக்குகளில் அளிக்கப்படும் தீர்ப்புக்கள் கிராமவாசிகள் மற்றும் விவசாயிகளுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்திவந்தன.
இது குறித்து பரிசீலித்த பிரான்ஸ் அரசு, வீட்டு விலங்குகள் மற்றும் கால்நடைகள் எழுப்பும் ஒலிகளுக்கு, ஒலி மாசுக்கள் பட்டியலிலிருந்து விலக்கு அளித்து புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
மேலும் பறவைகளின் கீச்சொலி, தவளைகளின் சத்தம் முதலிய கிராமப்புற ஒலிகளையும், வாசனைகளையும் பாதுகாக்க வழியமைத்திருக்கிறது இப் புதிய சட்டம்.
இது போன்ற ஒரு சட்டம் நாட்டுக்கு மிகவும் அவசியமானது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். புதிய சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து விவசாயிகளும், கால்நடை வளர்ப்பவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.